Thursday, August 21, 2008

தும்பை விட்டு விட்டு வாலை...


இந்தப் பேட்டியை புஷ்பா கந்தசாமி இரு வாரங்களுக்கு முன்பே கொடுத்திருக்கலாம். அட, போன வாரமாவது கொடுத்திருக்கலாம். ஆனால் நிலைமை முறுறும் வரை விட்டுவிட்டு இப்போது பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.

ஒரு பொய்க்கான பிரச்சாரம் ஆரம்பாமாகும்போதே அதற்கு சரியான பதிலைக் கொடுத்து வாயை அடைக்க வேண்டும். இதுவும் வியாபாரத்தில் ஒரு உத்திதான். அதே பொய் திரும்பத் திரும்ப ஊர்வலம் வரும்போது நல்லவர்களும் கூட நிஜமாக இருக்குமோ என நம்ப ஆரம்பித்துவிடுகிறார்கள்.

முதலில் குசேலன் வழக்கமான ரஜினி படம் இல்லை என்ற செய்தி பரவியது. அப்போதே... ஆமாம், இது முற்றிலும் வித்தியாசமான படம். ரஜினி எவ்வளவு நேரம் வருகிறார் என்பது முக்கியமல்ல, கதை அவரைச் சுற்றித்தான் நடக்கிறது, என்ற உண்மைகளை இதே புஷ்பாவும், வாசுவும் வெளிப்படையாக ஒரு பிரச்சாரமாகவே கூடச் செய்திருக்கலாம்.

நம்மைப் பற்றிய உண்மைகள் நம் வாயிலிருந்தே வரும் போது மரியாதை கிடைக்கும். பத்திரிகை மற்றும் எதிரி முகாமிலிருந்து வெளிப்படும்போது மக்களிடம் வெறுப்பைக் கிளப்பிவிடும். அனுபவஸ்தர் பாலச்சந்தரும் இந்த விஷயத்தில் அமைதி காத்தது வேதனையானது.

இந்தப் படத்தில் ரஜினியின் பங்கு எவ்வளவு என்று புஷ்பாவுக்கு மட்டுமல்ல... படத்துடன் சம்பந்தப்பட்ட அத்தனை பேருக்கும் தெரியும். ஆனால் ரஜினியின் பக்தர்களுக்குத் தெரியாதல்லவா...

மற்றபடி குசேலன் ஒரு நல்ல படம் என்பதை ஒப்புக் கொள்ள மறுப்பவர்களை ஒன்றும் செய்ய முடியாது. சத்யம், மும்பை எக்ஸ்பிரஸ் மாதிரி படங்களை ஆயிரம் முறை பார்க்கச் சொல்லி சாபம் வேண்டுமானால் கொடுக்கலாம்!

சரி, அந்த விவாதத்தை அப்புறம் பார்க்கலாம். புஷ்பா கந்தசாமி தனித்தனியாக பத்திரிகையாளர்களுக்கு கொடுத்துவரும் விளக்கங்களில் ஒன்று இங்கே தரப்பட்டுள்ளது.

இது ஒரு இணைய தளத்தில் வந்துள்ள கடடுரை. இதே செய்தி தினத்தந்தியிலும் வந்துள்ளது.


குசேலனுக்கு எதிராக திட்டமிட்ட சதி!- புஷ்பா


சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள குசேலன் திரைப்படத்தை இப்போதைக்கு எந்தத் திரையரங்கை விட்டும் தூக்கவும் இல்லை, புதிதாக எந்தக் காட்சியையும் சேர்க்கவும் இல்லை, என்று படத்தின் தயாரிப்பாளர்களுள் ஒருவரான புஷ்பா கந்தாசமி தெரிவித்துள்ளார்.

குசேலன் படத்தில் ரஜினிக்கு முக்கியத்துவம் இல்லை என்றும் அவரது காட்சிகள் அதிகமாக வருவதுபோல படத்தை மாற்ற வேண்டும் என்று பல மாவட்டங்களிலிருந்தும் கடிதங்கள் குவிந்த வண்ணம் உள்ளன, இயக்குநர் வாசுவுக்கும், ரஜினியின் தலைமை மன்றத்துக்கும்.
அரசியல் குறித்து ரஜினி தெரிவித்த கருத்துக்கள் ரசிகர்களுக்குப் பிடிக்கவில்லை எனத் தெரிய வந்ததால், அக்காட்சிகளை நீக்கிவிடுமாறு ரஜினி கூறினார். அதைத் தொடர்ந்து அக்காட்சிகள் நீக்கப்பட்டன.

இந்நிலையில் குசேலன் திரைப்படத்துக்கு கூட்டம் குறைவாக உள்ளதால் திரையரங்குகளிலிருந்து அந்தப் படத்தை தூக்கிவிட்டு, புதிய காட்சிகளைச் சேர்த்து மீண்டும் வெளியிடப்போவதாக ஒரு பத்திரிகையில் நேற்று செய்தி வெளியானது.

இதை பிரமிட் சாய்மிரா நிறுவனம் கடுமையாக மறுத்துள்ளது. படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான பாலச்சந்தரின் மகள் புஷ்பா கந்தசாமியும், இயக்குநர் வாசுவும் இந்த தகவல்களை மறுத்துள்ளனர்.

இதுகுறித்து புஷ்பா கந்தசாமி நேற்று கூறியதாவது:

குசேலன் படம் இன்னும் ஓடிக்கொண்டிருக்கும் போது. ரிலீசாகி 20 நாட்களுக்குள் ஒரு படத்தின் வியாபாரத்தை எப்படி கணிக்க முடியும். இது திட்டமிட்ட சதி.

உண்மையை மறைக்கவில்லை!

குசேலன் துவக்க விழாவிலேயே, தன்னுடைய பங்கு 25 சதவிகிதம், வடிவேலு 25 சதவிகிதம் மற்றும் பசுபதி 50 சதவிகிதம் என்று தெளிவாகக் கூறிவிட்டார் ரஜினி சார். இதை எந்த இடத்திலும் நாங்கள் மறுக்கவில்லை.

எந்த உண்மையையும் நாங்கள் மறைத்து இந்தப் படத்தை விற்கவில்லை. படத்தை வாங்க பிரமிட் சாய்மிரா எங்களுடன் ஒப்பந்தம் போடுவதற்கு முன்பாக இப்படத்தைப் பார்த்தார்கள். அவர்கள் முழுமையாக திருப்தியடைந்த பிறகுதான் வியாபாரம் பேசி முடித்தார்கள்.

ரிலீசுக்கு ஒரு வாரம் முன்புகூட படம் பார்த்த பிரமிட் சாய்மிரா உரிமையாளர்கள், படம் அருமையாக உள்ளது என்று கூறி உலகெங்கும் தாங்களே வெளியிடுகிறோம் எனறனர். உண்மை இப்படியிருக்கும்போது, எங்கள் மீது பழிபோடுவது என்ன நியாயம்?

இந்தப் படத்தை குறைவான திரையரங்குகளில் வெளியிட வேண்டும், கட்டணம் குறைவாக இருக்க வேண்டும். இப்படித்தான் ரஜினி சாரும் சொன்னார். அப்படிச் செய்யாததுதான் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காமல் செய்துவிட்டது.

அதுமட்டுமல்ல... இது குடும்பப் படம். பெண்களுக்குப் பிடித்த கதை. அவர்கள் ரசித்துப் பார்ப்பார்கள். ஆனால் அதுவரை அமைதியாக இருக்க வேண்டும். படம் ஓடிக் கொண்டிருக்கும்போதே, அதற்கு எதிர்மறையான விளம்பரங்களைக் கிளப்புவது வேதனையாக இருக்கிறது. இப்போதும் விளம்பரங்களை நல்ல மாதிரியாக இருக்கும்படி பார்த்துக் கொண்டால் போதும், வரவேற்பு நிச்சயம் தொடரும்.

ரசிகர்கள் மட்டுமல்ல, குடும்பம் குடும்பமாக பார்க்கத் தொடங்குவார்கள். அதற்கான அவகாசத்தைக் கூடத் தராமல் தேவையற்ற சர்ச்சைகளை சிலர் கிளப்பி விடுவதை இப்போது மக்கள் புரிந்து கொண்டிருப்பார்கள் என நம்புகிறேன்.

இது ஒரு நல்ல கதை. அந்த கதையின் மீது கொண்ட நம்பிக்கையால்தான் ரஜினி இந்தப் படத்தில் நடித்தார். அதே நம்பிக்கையில்தான் இப்போது ஷாரூக்கான் சொந்தமாக தயாரித்து நடிக்கிறார் இப்படத்தில்.

தெரியாத கதையைப் படமாக்கியிருந்தால், இன்று இவர்கள் சொல்லும் குற்றச்சாட்டுகளில் ஏதாவது நியாயமிருக்கும். ஆனால் இது எல்லாருக்கும் தெரிந்த கதை. படம் இப்படித்தான் இருக்கும் எனத் தெரிந்தே வாங்கினார்கள், திரையிட்டார்கள். இப்போது வந்து குறை சொல்கிறார்கள். இதே படம் மற்ற இடங்களில் நன்றாகத்தானே ஓடிக்கொண்டிருக்கிறது...!, என்றார் புஷ்பா கந்தசாமி.

வாசு மறுப்பு

ரஜினி தொடர்பாக புதிய காட்சிகள் எதையும் சேர்ப்பது குறித்த திட்டம் இப்போதைக்கு இல்லை என்றும் இப்படிப்பட்ட யூகச் செய்திகள்தான் படத்துக்கு தேவையற்ற சங்கடங்களை ஏற்படுத்திவிட்டதாகவும் இயக்குநர் வாசு தெரிவித்தார்.

நன்றி: தட்ஸ்தமிழ், தினத்தந்தி

No comments: