குசேலன் படத்தை திரையிட்ட தமிழக திரையரங்கு உரிமையாளர்களில் ஒரு பகுதியினர் நேற்று சென்னையில் கூடி, பத்திரிகையாளர்களிடம் தங்கள் நஷ்டக் கணக்கைக் காட்டினர்.
அதையும் உங்களுக்கு அப்படியே தமிழில் தருகிறேன்.
ஆங்கில பதிவில் இல்லாத சில திரையரங்கு உரிமையாளர்களின் கருத்துக்களையும் இங்கே நீங்கள் காணலாம்.
இவற்றை முழுமையாக (தினத்தந்தி தவிர - அதிலும்கூட ஓரளவுக்குதான் கொடுத்திருந்தார்கள்) எந்தப் பத்திரிகையும் தரவில்லை.
இந்த சந்திப்பில் நடந்தவற்றை திரட்டி இங்கே தருகிறேன். சங்கத்தின் தலைவர் பன்னீர், சுந்தர் திரையரங்க உரிமையாளர் கண்ணப்பன் உள்பட 12 திரையரங்கு உரிமையாளர்கள் கூறியதன் தொகுப்புதான் இங்கே தந்திருப்பது.
இவர்களின் தரப்பில் என்ன நியாயம் உள்ளது என நீங்களே சொல்லுங்கள், முழுதும் படித்துவிட்டு!
இன்னொன்று-
இன்னும் ஒரு விரிவான கட்டுரையோடு குசேலன் சம்பந்தப்பட்ட பதிவுகளை நிறுத்திவிட்டு, அடுத்த கட்டத்தைப் பற்றிப் பார்ப்பது நண்பர்களுக்குப் புத்துணர்ச்சி தரும் என நினைக்கிறேன்.ரஜினி சாரிடம் நாங்கள் பணம் கேட்கவில்லை!குசேலன் படத்தை ரஜினி சார் சொன்ன மாதிரி எங்களுக்கு வியாபாரம் செய்திருந்தால், இந்தப் படம் தமிழகத்தில் நன்றாகவே போயிருக்கும். தயாரிப்பாளர் பாலச்சந்தரும், இயக்குநர் வாசுவும் சேர்ந்து போட்ட திட்டத்தில் நாங்கள் மாட்டிக் கொண்டோம், என்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.
குசேலன் படம் தமிழகத்தையும் ஆந்திராவையும் தவிர பிற பகுதிகளில் சிறப்பாக ஓடிக் கொண்டிருப்பதாகக் கூறுகிறார்கள். நீங்கள் மட்டும் ஏன் தொடர்ந்து நஷ்டம் என்கிறீர்கள்? குசேலன் படத்தில் எனது பங்கு 25 சதவீதம்தான் என ரஜினி கூறினார்.
ஆனால் படப்பிடிப்பு முடிந்து படம் திரைக்கு வரும் நேரத்தில், இது ரஜினி படம், அவர் படம் முழுக்க வருகிறார் என இயக்குனர் வாசு தெரிவித்தார். அதற்கேற்ற மாதிரி பத்திரிகைச் செய்திகளும் இது ரஜினியின் படம் என்ற இமேஜைக் கொடுக்கும் விதத்தில் பெரிய அளவு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தின.
படத்தை திரையிட நாங்கள் வாங்கும்போதும் வாசு இதையே கூறினார். எனவே அதை நம்பி அதிக விலை கொடுத்து வாங்கினோம். தமிழகம் முழுவதும் 375 தியேட்டர்களில் படம் திரையிடப்பட்டது. ஆனால் படம் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இதனால் வசூல் குறைந்து நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
எனவே இதைச் சரிகட்ட நாங்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களிடம் கொடுத்த தொகையை சதவிகித கணக்கு வைத்து, ‘மினிமம் கியாரண்டி’ தொகையை டெபாசிட்டாக வைத்துக்கொண்டு, மீதித் தொகையை திருப்பித் தருமாரு கோருகிறோம். இதனால் யாருக்கும் நஷ்டம் ஏற்படாது. பாலச்சந்தர், விஜயகுமார், சாய்மிரா போன்றவர்களின் லாபத்தில் ஒரு பகுதி குறையும். இதைச் செய்துதான் தீர வேண்டும்.
ரஜினி தலையிட வேண்டும்! இந்த விஷயத்தில் தயாரிப்பாளர்களை விட சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தைத்தான் நாங்கள் அதிகம் நம்புகிறோம். இந்தப் படத்தில் தன்னுடைய பங்களிப்பு குறித்து அவர் ஏற்கெனவே தெளிவாகக் கூறியும், அதை எங்களிடம் தவறாகச் சொல்லி வியாபாரம் செய்த தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர் மீதுதான் எங்கள் கோபமெல்லாம்.
இது நல்ல படம்தான். ஆனால் தவறாக வியாபாரம் செய்யப்பட்ட படம். அதுதான் பிரச்சினையே!
எனவே மனித நேயமிக்க சூப்பர்ஸ்டார் ரஜினி சார் இதில் தலையிட்டு எங்களுக்கு பணத்தை வாங்கித் தர வேண்டும்.
ரஜினி இந்தப் படத்தில் கவுரவ நடிகர்தானே... அப்படியே கதாநாயகனாக இருந்தாலும், அவரிடம் நீங்கள் எப்படி பணத்தைத் திருப்பித் தரக் கேட்பீர்கள்?நீங்கள் சொல்வதை நாங்கள் மறுக்கவில்லை. நாங்கள் இப்போதும் ரஜினி சாரிடம் பணம் கேட்கவில்லை. ஆனால் இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களிடம் எங்களால் நியாயமாகப் பணத்தைப் பெற முடியுமா என்ற சந்தேகம் இருக்கிறது.
எனவேதான் ரஜினி சார் இதில் தலையிட வேண்டும் என்கிறோம். அவருக்கு எங்களைப் போன்றவர்களின் கஷ்டம் தெரியும்.
பாபா படத்தில் நாங்கள் கேட்காமலே கூப்பிட்டுப் பணத்தைக் கொடுத்தார் ரஜினி. இப்போது சொல்கிறோம், பாபா தோல்விப் படமல்ல (அடப் பாவிகளா... இதை அப்போதே சொல்லியிருக்கலாமே!!). அதற்கே நஷ்ட ஈடு கொடுத்தவர்தான் ரஜினி. அப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதரின் காதுகளுக்கு இந்த விஷயம் போக வேண்டும், இந்த வியாபாரத்தில் நடந்த உண்மையான விஷயங்கள் தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் இந்த பத்திரிகையாளர் சந்திப்பு.
திருப்பித் தராவிட்டால்... ரஜினி படத்தை வாங்க மாட்டீர்களா?படத்துக்கான நஷ்டத்தை திருப்பி தராவிட்டால் கவிதாலயா, செவன் ஆர்ட்ஸ் தயாரிக்கும் படங்களுக்கு இனி ஒத்துழைப்பு அளிக்க மாட்டோம். இதில் ரஜினி சார் மீது ஏன் பழிபோட வேண்டும். பொதுவாகவே அவர் படமென்றால் குறைந்தது 50 நாட்களுக்கு அரங்கு நிறைந்த காட்சிகள்தான். ஆனால் இந்தப் படத்தில் அது நடக்கவில்லையே.
ஆனால் உண்மையைச் சொல்லி, இதில் பாதித் தொகைக்கு படத்தை விற்றிருந்தால்கூட எங்களுக்கு நல்ல லாபம் கிடைத்திருக்கும். படமும் நன்றாகப் போயிருக்கும்.
இந்த விஷயத்தில் ரஜினிசார் தீர்க்கதரிசி. அவர் சரியாகச் சொன்னார், படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில். நாங்கள்தான் பாலச்சந்தரின் வார்த்தைகளை நம்பிவிட்டோம்.
இந்தப் படம் தமிழகத்தில் மட்டும் நன்றாகப் போகாததற்கு யார் காரணம், அதன் பின்னணி என்ன என்பதெல்லாம் எங்களுக்குத் தேவையில்லாத விஷயம். நாங்கள் வியாபாரிகள். நஷ்டத்தைத் தாங்க முடியாது, அதனால் அதைச் சரிகட்டச் சொல்கிறோம். இதற்கும் ரஜினி படங்களை நாங்கள் வாங்குவதற்கும் சம்பந்தமில்லை. நிச்சயம் அடுத்த படத்தை வாங்குவோம். ஆனால் விழிப்புடன் இருப்போம்.
அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆகஸ்ட் 23-ம் தேதி சென்னையில் அனைத்து திரையரங்க உரிமையாளர்களும் கலந்து ஆலோசிக்க உள்ளோம்.
இதே போன்ற நடவடிக்கைகளை அனைத்து நடிகர்கள் நடித்த படங்களுக்கும் எடுப்பீர்களா...?இந்தக் கேள்விக்கு சுந்தர் திரையரங்க உரிமையாளர் கண்ணப்பன் சொன்ன பதில்...
பெரிய நஷ்டம் வந்தால் தவிர்க்க வேறு வழியில்லை.
இப்போதும் வசூலான தொகையை வைத்துச் சொல்கிறோம், நியாயமான சதவிகிதத்தை அவர்கள் எடுத்துக் கொண்டு மீதியைக் கொடுத்தால் யாருகத்கும் நஷ்டமில்லை. பாலச்சந்தரிடம் ரஜினி சார் சம்பளம் பெறவில்லை என்று சொல்கிறார்கள். அப்படியிருக்க அவர்களுக்கு நஷ்டம் வர வாய்ப்பே இல்லையே.
நல்ல மனிதர் ரஜினியின் பெயரை வைத்து நடத்தப்பட்ட சூதாட்டம் இது. இதில் அவர் பெயரைக் கெடுத்தது கூடவே இருப்பவர்கள்தான். எத்தனையோ நெருக்கடியான சூழலில் நாங்கள் ரஜினி சாருக்குக் கைகொடுத்தோம். அதையும் மறந்துவிடாதீர்கள்.
இன்னொன்று எல்லோரிடமும் இப்படிக் கேட்க முடியாதுதான். கொடுக்கிறவரிடம்தானே கேட்க முடியும். அதுதான் ரஜினி சார் மீது நாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை. தனிப்பட்ட முறையின் எங்களுக்கு ரஜினிசார் மீது எந்த வருத்தமும் இல்லை. நாட்டுக்கொரு நல்லவன் பட நஷ்டத்தைக்கூட என்னைப் போன்ற சிலர் சமாளிக்க உதவியவர் ரஜினி.
ஒரு வியாபாரத்தில் லாப நஷ்டம் வருவது சகஜம்தானே... இதே ரஜினி படங்கள் பலவற்றில் கணிசமாக லாபம் பார்த்தீர்கள் அல்லவா?இந்தக் கேள்விக்கு யாருமே பதில் சொல்லத் தயாராக இல்லை!!
பின்னர் பழனியப்பன் மட்டும், இப்போதைய சூழ்நிலையில் இந்த மாதிரிதான் வியாபாரம் செய்ய வேண்டி உள்ளது.
சரி... படத்தை நீங்கள் பிரமிட் சாய்மிராவிடம்தானே வாங்கினீர்கள்... அவர்களை விட்டுவிட்டு ரஜினியையும், பாலச்சந்தரையும் பிடித்துக்கொண்டிருப்பது ஏன்?ஒரு நிமிடம் அமைதி காத்த கண்ணப்பன்... அதான் சொன்னேனே, கொடுப்பவர்களிம்தான் கேட்க முடியும். இது எங்கள் கோரிக்கைதான். அதை மனிதாபிமான முறையில் ரஜினி பரிசீலிக்க வேண்டும்.
நியாயம்தானா...நீங்களே சொல்லுங்க!இதில் ரஜினியின் நிலை என்ன?
நடந்த நிகழ்வுகளைப் பார்த்து மிகுந்த அதிருப்திக்குள்ளான சூப்பர்ஸ்டார், முழுமையான கலெக்ஷன் ரிப்போர்ட்டை பிரமிட் சாய்மிராவிடம் கேட்டுள்ளாராம்.
ஆனால் பிரமிட் சாய்மிரா இதில் பட்டும் படாமல் இருக்கிறது. காரணம் அவர்களுக்கு Break Even கிடைத்துவிட்டது என்பதே உண்மை. கேரளா மற்றும் வெளிநாட்டு உரிமைகளில் கணிசமான கோடிகள் வந்துள்ளன. ஆனால் 'நாங்கள் செய்த வியாபாரத்தில் கிடைத்த லாபத்தை மற்றவர்களுக்கு ஏன் தரவேண்டும்?' என்ற நினைப்பில் அமைதியாக இருக்கிறார்கள் சாய்மிரா நிறுவனத்தினர்.
இந்த நிலையில் சாய்மிராவிடம் திரையரங்க உரிமையாளர்கள் போய் நின்றால், சாய்மிரா நஷ்டக் கணக்கோடு ரஜினியிடம்தான் வரப்போகிறது. காரணம் அவர்களிடம் நேர்மையான வியாபாரத்தை எதிர்பார்க்க முடியாது என பல திரையரங்க உரிமையாளர்கள் ஏற்கெனவே கூறியிருக்கிறார்கள். அவர்களுடன் போட்ட ஒப்பந்தங்களை ரத்து செய்த எத்தனையோ திரையரங்க உரிமையாளர்களைக் காட்ட முடியும்.
ஆக லாபம் பார்த்தது பிரமிட் சாய்மிரா... லாபம் சம்பாதிக்கும் பொருளை (படத்தைத்) தந்தவர்கள் ரஜினியும் பாலச்சந்தரும். ஆனால் இடையில் நஷ்டப்பட்ட சிலர் தங்களிடம் அதிக விலைக்கு விற்ற சாய்மிராவை விட்டுவிட்டு, சிலரைக் காப்பாற்ற உதவிய ரஜினியின் பெயரை அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இன்னொன்று இந்தப் படத்தை மினிமம் கேரண்டி அடிப்படையில் வாங்கியிருக்கிறார்கள் திரையரங்க உரிமையாளர்கள். இப்படி வாங்குவது அவரவர் சொந்த ரிஸ்க்கில் வாங்குவது போலத்தான். நஷ்டப்பட்டாலும் சங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. யாருக்கும் தடை போடவும் முடியாது.
நான் முன்பே சொன்னது போல எரிகிற வீட்டில் பிடுங்கிய வரை லாபம்தானே...!
ஜெய்ஹிந்த்!
No comments:
Post a Comment