பொறுத்தது போதுமன்று பொங்கி எழுந்து விட்டார்கள் ரஜினி ரசிகர்கள். ரஜினிக்கெதிராகக் கட்டுரை வெளியிட்ட இரண்டு வாரமிருமுறை இதழ்களைக் கொளுத்தி தங்கள் எதிர்ப்பைக் காட்டியதோடு அவற்றின் அலுவலகஙகளுக்கு எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்துவிட்டனர்.
ஒகேனக்கல் குடிநீர் திட்டப் பிரச்சினையில் கன்னடர்களுக்கு எதிராக தான் பேசிய பேச்சுக்கு, குசேலன் வெளியீட்டின் போது விளக்கமளித்து வருத்தம் தெரிவித்திருந்தார் ரஜினி.
ஆனால் அவர் கன்னடர்களிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டார் என்று கூறி சில நடிகர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
ஆனால் பெரும்பாலான திரையுலகப் பிரமுகர்களும், ரஜினி மீது எந்தத் தவறுமில்லை என்றும், இந்த விஷயத்தில் தேவையில்லாமல் ரஜினிக்கு எதிராகப் பேசவேண்டாம் எனவும் கருத்துக் கூறியுள்ளனர். பிலிம்சேம்ர் தலைவரும் இதுகுறித்து அறிக்கைவிடுத்துள்ளார்.
இந்நிலையில், ஒரு வாரமிருமுறை பத்திரிகையில் ரஜினியை விமர்சித்து எழுதப்பட்டுள்ளதாகக் கூறி அவற்றின் பிரதிகளைக் கொளுத்தியுள்ளனர். மேலும் இரண்டு வாரப் பத்திரிகைகளின் இதழ்களையும் இவ்வாறு கொளுத்தி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம், சேலம் மற்றும் கோவை நகரங்களில் இச்சம்பவங்களை நடத்திய ரஜினி ரசிகர்கள், போலீசார் வந்ததையொட்டி போராட்டைத்தை நிறுத்திக் கொண்டனர்.
ரஜனிக்கெதிராக கடும் விமர்சனங்களை முன் வைத்துள்ள குறிப்பிட்ட பத்திரிகை அலுவலகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தவும் ரசிகர்கள் முடிவெடுத்துள்ளனர்.
இதுகுறித்து சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் ரஜினி ரசிகரான இம்மானுவேல் கூறியதாவது:
பத்திரிகைகளில் எவ்வளவோ விஷயங்களை எங்களுக்கெதிராக எழுதுகிறார்கள். ஆனால் தலைவர் அமைதியாக இருந்து குடும்பத்தைக் கவனிக்கச் சொல்வதால் நாங்கள் அவற்றைக் கண்டு கொள்வதில்லை. ஆனால் இனியும் பொறுக்க முடியாது.
தலைவர் சொன்னாலும்கூட கேட்கப் போவதில்லை. கண்டிப்பாக பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தியே தீருவோம், என்றார்.
மேலும் மாவட்ட வாரியாக இத்தகைய ஆர்ப்பாட்டங்களை நடத்தவும், ரஜினி ரசிகர் மன்றங்கள் முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.
இதுகுறித்து ரஜினி ரசிகர் மன்றப் பொறுப்பாளர் சத்தியநாராயணாவிடம் கேட்டோம்.
ரஜினி சார் இந்த மாதிரி ஆர்ப்பாட்டங்களை எப்போதும் விரும்பமாட்டார். எந்தப் பிரச்சினையிலும் தன் ரசிகர்களை முன்நிறுத்தமாட்டார். இந்தப் பிரச்சினை அவருக்கு ஒரு பொருட்டே அல்ல. எனவே ரசிகர்கள் அமைதியாக இருக்க வேண்டும். அமைதியாக இருப்பார்கள் என்று நம்புவோம். குசேலன் வெற்றியை அனுபவிப்போம், என்றார்.
1 comment:
உங்கள் பதிவை படித்தவுடன் மிகவும் ஆறுதலாக இருந்தது. எத்தணை பேர் தலைவர் மீது வயித்தெரிச்சலில் இருக்கிறார்கள் என்று நன்றாக தெரிந்து விட்டது இந்த முறை.
Post a Comment