விஜய்காந்த் ரூ.10 கோடி செலவில் பிரமாண்டமாய் சட்டசபை, நாடாளுமன்ற செட் போட்டு எடுத்த ‘இளைஞர் அணி மாநாடு சினிமா ரிசல்ட்’ என்ன?
வழக்கமாக சினிமாக்காரர்கள், சீசனில் படம் ரிலீஸானதும் ஒரு டயலாக் சொல்வார்கள்:
‘படம் பிரமாதமா இருக்குன்னு தமிழ்நாடே பாராட்டுது சார்...நல்ல கலெக்ஷன். தீபாவளி ரிலீஸ்லயே இந்தப் படம்தான் நம்பர் ஒன்...’
-இப்படி பேட்டி கொடுத்த மூன்றாவது நாளே படம் தியேட்டரைவிட்டு ஓடியிருக்கும்!
இந்த இளைஞரணி 'மாநாடு சினிமாவும்' இந்த லட்சணத்தில்தான் அமைந்தது.
நான் வித்தியாசமானவனாக்கும்... என்று மஞ்சள் கொடியோடு வந்து நின்ற விஜய்காந்த், இன்றைக்கு கழகங்களையே தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு பொய்யிலும் புனை சுருட்டிலும் ஓங்கி நிற்கிறார். பொதுமக்களுக்குத் தொல்லை கொடுப்பதில் இன்றைய தேதிக்கு இவரை அசைச்சுக்க முடியாது!
இவரது தொண்டர்கள் மட்டும் சளைத்தவர்களா... ராவண ராஜ்யத்தில் வானரப் படைகள் நிகழ்த்தியதாகச் சொல்லப்படும் ராமாயணக் காட்சிகள்தான் மனக் கண்ணில் நிற்கின்றன. அப்படியொரு ஆட்டம் போட்டிருக்கிறார்கள் இந்த விஜய்காந்த் சேனைகள், சிங்காரச் சென்னையில்...
ஒரு நபருக்கு 300 ரூபாய் கூலி, டாஸ்மாக் சரக்கு, பிரியாணி கொடுத்து இந்த கொள்கைச் சிங்கங்களைக் கூட்டி வந்திருக்கிறார் அவர்களின் கேப்டன்!
இதுகுறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் தட்ஸ்தமிழ் செய்திகளைப் பாருங்கள்!
தேமுதிக மாநாட்டு சாதனை!...விஜய்காந்தின் தேமுதிக இளைஞர் அணி மாநாட்டுக்கு திரண்டு வந்திருந்த தொண்டர்கள் குடித்துவிட்டுப் போட்ட பீர் பாட்டில்கள் மற்றும் மதுப் புட்டிகளால் மெரினா கடற்கரையும் அண்ணாசாலை, சிவானந்தா சாலை பகுதிகளும் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
இந்த மாநாட்டுக்கு வந்த தொண்டர்கள் பெரும்பாலும் நல்ல 'மப்'பில் வந்திருந்தனர்.
கையோடு தாங்கள் கொண்டு வந்திருந்து டாஸ்மாக் ஐட்டங்களை நேற்று காலை முதலே அண்ணா சாலை, தீவுத் திடல், மெரினா கடற்கரைப் பகுதிகளில் 'கடை பரப்பி' விட்டனர்.
திறந்த வெளியில் குடித்துவிட்டு காலி மதுப் புட்டிகளையும், பிளாஸ்டிக் குப்பைகளையும் அப்படியே போட்டுவிட்டுச் சென்றதால் சென்னை நகரின் முக்கிய பகுதிகள் நாறிப் போய்விட்டதாக பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக குடும்பம் குடும்பமாக சென்னைவாசிகளும், வெளியூர் பயணிகளும் வந்து குவியும் சென்னை மெரினா கடற்கரையில் எங்கும் பீர் பாட்டில்களும், பிளாஸ்டிக் குப்பைகளுமாகக் காட்சி தந்தது மக்களை கடும் அதிருப்திக்குள்ளாக்கியது.
மேலும் மணல் பகுதிகளில் உட்கார முடியாத அளவுக்கு தேமுதிக தொண்டர்கள் அசிங்கம் பண்ணி வைத்திருந்ததும், வார இறுதி நாளான நேற்று மக்களை மெரீனா பக்கம் நெருங்க விடாமல் செய்துவிட்டது.
இதுபோதாதென்று மஞ்சள் சட்டை அணிந்த சில இளைஞர்கள் பெண்களைக் கிண்டல் செய்வதிலும், கடல் அலைகள் கரையைத் தொடும் பகுதியில் நின்றவண்ணம் அலையில் குளிக்கும் பெண்களைக் கிண்டலடித்தும் மக்களின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டனர்.
'தொண்டர்கள் எனும் பெயரில் இவர்கள் செய்திருந்த அசிங்கங்களைச் சுத்தம் செய்ய நியாயமாக சென்னை மாநகராட்சிக்கு பெரிய தொகையை வழங்கியிருக்க வேண்டும் சம்பந்தப்பட்ட கட்சித் தலைவர். அரசியல் கட்சி என்ற பெயரில் இவர்களைப் போன்றவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள்', என்று அதிருப்தி தெரிவித்தார் இந்த மண்டத்தைச் சேர்ந்த சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர்.
கடற்கரையே இப்படியென்றால் தீவுத்திடல்....?
அங்கு இதை விட பலமடங்கு மோசமான நிலை. இதையும் மாநகராட்சிதான் சுத்தம் செய்தாக வேண்டும்.
இன்னொரு பக்கம் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக 5 மணி நேரத்துக்கும் மேலாக நடுச் சாலையில் மழையில் அவதிப்பட்டனர் பொதுமக்கள்.
சென்னை போன்ற பெருநகரங்களில் போக்குவரத்துக்கும், மக்களின் அன்றாட வாழ்க்கைக்கும் இடையூறு விளைவிக்கும் இத்தகைய மாநாடுகளை அனுமதிக்கக் கூடாது என பலவேறு மக்கள் நலச் சங்கங்கள் கோரிக்கை விடுத்தும் அரசு கேட்பதாக இல்லை. அதனால்தான் மக்களுக்கு இவ்வளவு தொல்லை!நெரிசலில் விழிபிதுங்கிய சென்னை!ஒரு சின்ன மழைக்கே கடும் போக்கு வரத்து நெரிசலில் திணறும் மோசமான உள்கட்டமைப்பு வசதிகள் கொண்டது சென்னை நகரம்.
இதில் அவ்வப்போது மாநாடு, பேரணிகள் என்று அரசியல்வாதிகள் விளையாடுவார்கள். நேற்று விஜய்காந்தின் முறை.
பிற்பகல் அவர் கட்சியின் மாநாடு துவங்குவதற்கு முன் ஆரம்பித்த போக்குவரத்து நெரிசல் நள்ளிரவு தாண்டியும் நீடித்தது.
வார இறுதி, தீபாவளி சீசன், கூடவே இந்த மாநாட்டு கலாட்டக்களும் சேர்ந்து கொண்டதால் கிண்டியிலிருந்து, தி.நகர், பீச், அண்ணாசாலைக்கு சென்ற பலரும் கடும் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொண்டு முன்னேறவும் முடியாமல் பின்செல்லவும் வழியில்லாமல் தவித்தனர்.
பேருந்துகளில் சென்றோர் சாதாரண தூரத்தைக் கடக்கவே பல மணி நேரம் ஆனது. வாகனங்களைத் திருப்பிவிட வழியின்றி போக்குவரத்து போலீசார் மிகவும் திணறிப்போனார்கள்.
கடற்கரை காமராஜர் ரோடு, அண்ணாசாலை போன்ற முக்கிய சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியவில்லை. பொதுமக்கள் பலர் அதிருப்தியுடன் திட்டியபடி வாகனங்களில் பல மணி நேரம் ஊர்ந்து சென்றனர். -இதுக்குமேல வித்தியாசமான கட்சிய, தலைவரை உலகத்துல எங்காவது உங்களால காட்ட முடியுமா...!
குறிப்பு: தமிழ்நாட்டில் எந்தக் கட்சித் தொண்டர்கள் குடிக்காமல் இருக்கிறார்கள்... திமுக, அதிமுக, மது ஒழிப்பு மாநாடு நடத்தும் பாமக, காந்தியடிகளைத் தலைவராகப் போட்டுக் கொள்ளும் காங்கிரஸ்... இப்படி எல்லா கட்சித் தொண்டர்களுமே குடிப்பதில் பிஎச்டியே வாங்கியிருக்கும் போது, விஜய்காந்தையும் அவர் கட்சிக்காரர்களையும் மட்டும் குடிகாரர்கள் என திட்டுவது சரியா என பல நண்பர்கள் கருத்து எழுதக் கூடும்.
அப்படி எழுதும் முன், 'நான் வித்தியாசமானவனுங்கோ... எங்க கட்சி வித்தியாசமோ வித்தியாமுங்கோ...' என்றெல்லாம் கவுண்டர் ஸ்டைலில் கூப்பாடு போட்டு வரும் விஜய்காந்தைக் கொஞ்சம் மனக் கண்ணில் நிறுத்திப் பார்க்கவும்.
அதே பதவி வெறி, அதே பணப் பேராசை, அதே துஷ்பிரயோகம், அதே கட்சிகளுடன் கூட்டு... அப்புறம் எதற்கு இந்தக் கருமம் வேறு... ஏற்கெனவே உள்ள கழகங்களே போதுமே!
1 comment:
போகிற போக்கை பார்த்தால் பயமாகத்தான் உள்ளது. ரொம்ப பயமாக
Post a Comment