ஏ.ஆர் ரஹ்மான் ஆஸ்கர் வாங்கினார்… மகா சந்தோஷம். அதற்காக மற்ற கலைஞர்களை குறைவாக மதிப்பிடுவது அறியாமை. இளையராஜா என்ற மகா கலைஞன் பிறக்காமல் போயிருந்தால் தமிழ் சினிமா இசையே தெரியாமல் போயிருக்கும். அவரும் எம்எஸ்வியும் இன்னும் எத்தனையோ மேதைகளும் விருதுகளையே வென்றவர்கள். அவர்களை யாரோடும் ஒப்பிட வேண்டாம், என்று கூறியுள்ளார் கர்நாடக இசை மேதை டாக்டர் எம் பாலமுரளிகிருஷ்ணா.
கர்நாடக இசை கலைஞரும், திரைப்பட பாடகருமான பாலமுரளி கிருஷ்ணா 40 வருடங்களுக்கு பிறகு ‘கதை’ என்ற படத்தில் பாடகராகவே நடித்து வருகிறார்.
இதுகுறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது: 40 வருடத்துக்கு முன்பு ‘பக்தபிரகலாதன்’ என்ற படத்தில் நாரதர் வேடத்தில் நடித்தேன். அது புகழ்பெற்றது. பிறகு வந்த வாய்ப்புகள் அனைத்தும் நாரதர் வேடங்களாக வந்ததால் மறுத்துவிட்டேன்.
இப்போது ‘கதை’ படத்தில் நான் பாடிய பாடல் ஒன்று இடம்பெறுகிறது. அந்த பாடலை பாடுவது போன்று நடிக்கிறேன். சினிமாவில் நடித்தது குறைவுதான். காரணம் என் முழு கவனமும் இசையின் பக்கம் இருந்தது. இப்போது நிறைய நேரம் இருக்கிறது. நல்ல கேரக்டரோடு வாய்ப்பு தந்தால் தொடர்ந்து நடிப்பேன்.
யாரையும் யாரோடும் ஒப்பிட வேண்டாம்!
ரஹ்மான் ஆஸ்கர் வாங்கியது பற்றி நிறைய கேட்டு விட்டார்கள். நானும் நிறைய சொல்லிவிட்டேன். இந்த விஷயத்தில் நான் அதிகம் சங்கடப்பட்டது விருது பெற்ற ரஹ்மானோடு இளையராஜாவையும் மற்றவர்களையும் ஒப்பிட்டு வந்த செய்திகள் மற்றும் அரைவேக்காட்டுத்தனமான கட்டுரைகள்.
ரஹ்மான் ஒரு இளம் மேதை. அவர் ஆஸ்கர் விருது வாங்கியது எல்லாருக்கும் பெருமையான விஷயம்தான். ஆனால் அதற்காக மற்ற மேதைகளை சிறுமைப்படுத்தும் போக்கு, உண்மையான இசை ரசிகர்கள் செய்யும் வேலையல்ல.
இசை பொதுவானது. யாருக்கும் பட்டா போட்டுக் கொடுத்து விடவில்லை. ஆனால் தனக்குத் தெரிந்த வித்தையை மட்டுமே விஸ்தாரமாகக் காட்டிக் கொண்டிருக்காமல், இசையின் இலக்கணத்தை மீறாமல் சாதனைகள் படைத்துக் கொண்டிருப்பவர் ராஜா. அவருக்கு விருதுகள் ஒரு பெரிய விஷயமல்ல. விருதுகளைத் தாண்டிய மகா கலைஞன் அவர். நியாயமாக இப்போது உலகின் உயர்ந்த இசை விருதுகள் அவரைத் தேடி வரவேண்டும்.
இன்னொரு விஷயம் தெரிந்து கொள்ளுங்கள். உலகின் அனைத்து இசைக்கும் ஆதி இந்திய இசையே. இங்கிருந்துதான் சகலமும் ஆரம்பம். ஒரு இந்திய இசையமைப்பாளருக்கு தெரிந்த ஆத்மார்த்தமான இசையை வெளிநாட்டுக்காரனால் தரமுடியாது.
நான் உலகின் பெரும்பாலான இசையைத் தெரிந்து வைத்திருக்கிறேன். பல மொழிகளில் பாடியிருக்கிறேன். அந்த அனுபவத்தில் சொல்கிறேன். இந்திய சாஸ்திரிய இசைக்கு இணையில்லை. அந்த சாஸ்திரிய இசையில் கரை கண்டவர் இளையராஜா என்றார் பாலமுரளி கிருஷ்ணா.
இளையராஜாவின் இசையில் சின்னக் கண்ணன் அழைக்கிறான்… என்ற காலத்தால் அழியாத இனிய பாடலைப் பாடியவர் டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா. ராஜாவின் திருவாசகம் ஆரட்டோரியோவை வெளியி்ட்டவரும் அவரே.
குறிப்பு: தட்ஸ்தமிழில் வந்த கட்டுரை இது. ஒரு விஷயத்தை நண்பர்கள் கவனிக்க: இளையராஜா மற்றும் ரஹ்மான் இருவரின் நலம் விரும்பி டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா. யாரையும் யாரோடும் ஒப்பிடக்கூடாது என்பதே அவரது இந்தப் பேட்டியின் நோக்கமாக இருந்துள்ளது. ரஹ்மானை இளம் மேதை என்றே அவர் வர்ணிக்கிறார். எனவே கருத்து எழுதும் முன் இவற்றைக் கவனத்தில் கொள்வது நலம்.