Showing posts with label kamal. ரஜினி. Show all posts
Showing posts with label kamal. ரஜினி. Show all posts

Tuesday, March 3, 2009

திரையுலகில் அரசியல் வேண்டாம்! - ரஜினி







திரையுலகில் அரசியல் வேண்டாம்! - ரஜினி

தயவுசெய்து தமிழர் - கன்னடர் என திரையுலகில் அரசியலைக் கலந்து விடாதீர்கள். நாம் அனைவரும் சகோதரர்களாக இருப்போம், பிரிவினை வேண்டாம், என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ரஜினியின் இந்த வார்த்தைகளை கூடியிருந்த மொத்தக் கூட்டமும் பெரும் கைத்தட்டலோடு வரவேற்றது.

கன்னடத் திரையுலகின் 75 வது ஆண்டு விழாவையொட்டி, 'அம்ருத மகோத்ஸவம்' எனும் பெயரில் 3 நாள் பிரம்மாண்ட திரையுலக திருவிழா பெங்களூரில் நடைபெற்று வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை முதல் நாள் நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்றுப் பேசினார்.

ரஜினியும் அன்றே கலந்து கொள்வார் எனக் கூறப்பட்டது. ஆனால் கமல்ஹாசனைத் தவிர தமிழ் திரையுலகிலிருந்து வேறு யாரும் நேற்று கலந்து கொள்ளவில்லை.

ஹைதராபாத்தில் நடந்த தனது நண்பர் மோகன்பாபு மகன் திருமணத்துக்குச் சென்றுவிட்டு, இன்று கன்னட திரையுலக பவள விழாவில் பங்கேற்றார் ரஜினி.

அவர் நிகழ்ச்சிக்கு வருகிறார் என்பது தெரிந்ததும், ஏராளமாய் கூட்டம் திரண்டுவிட்டது, விழா நடக்கும் இடத்தில்.

பெருத்த கரவொலிக்கிடையே மேடையேறினார் ரஜினி. அவருடன் தாசரி நாராயணராவ், ஜெயப்ரதா, பிரகாஷ் ராஜ், பிரபு தேவா மற்றும் ராமா நாயுடு ஆகியோரும் மேடைக்கு வந்தனர்.

பின்னர் ரஜினி பேசியதாவது:

நாம் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் எல்லோருமே அண்ணன் தம்பிங்க மாதிரிதான். இந்த அண்ணன் தம்பிங்க அடிச்சிக்கிறதுனால எந்த நன்மையும் இல்லே.

பாருங்க... அரசியல் என்பது மிகப்பெரிய சமுத்திரம் மாதிரி. நம்ம சினிமா ஒரு சின்ன குளம் மாதிரி. ஒரு சமுத்திரத்தாலேயே தன்னோட பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள முடியாத போது, அதை இந்த சின்னக் குளம் தீர்த்து வெச்சிட முடியுமா?

அதனால அரசியலை விட்டுடுங்க... சினிமாக்காரங்க சினிமாக்காரங்களா ஒத்துமையா இருப்போம். இதுக்காக ஜனங்க பாவம் சண்டை போட்டுக்கக் கூடாது. அவங்க கஷ்டப்படக் கூடாது. அதுதான் முக்கியம்.

தரமான படங்களை எடுங்கள்!

கன்னட திரையுலகுக்கு நான் சொல்லிக்க விரும்பறதெல்லாம், நல்ல சினிமா, நாவல்களை அடிப்படையாகக் கொண்ட சினிமா எடுங்க. தா ரா சு, இந்திரா போன்ற இலக்கியவாதிகளின் படைப்புகளை மையமா வச்சி எவ்வளவோ நல்ல படங்கள் தர முடியும். முயற்சி பண்ணுங்க.

குவெம்பு, ஷிவ்ராம் காரத் மற்று பெண்ட்ரே போன்ற சிறந்த இலக்கியவாதிகளின் படைப்புகளை நல்ல படங்கள் எடுக்கப் பயன்படுத்திக்குங்க. இத்தனை வருஷமா இதையெல்லாம் ஏன் நீங்க செய்யலேன்னு புரியல. அதுல எனக்கு கொஞ்சம் வருத்தம்தான். ஒரு ரசிகனா, கலைஞனா எல்லா மொழிகள்லேயும் உள்ள சிறந்த இலக்கிய படைப்புகள் திரைப்படங்களாக எடுக்கப்படணும் என்று விரும்புக்றேன்.

கன்னடத்தில் நடிப்பேன்!

எனக்கும் ஒரு கன்னடப் படத்துல நடிக்கணும்னு ஆசையிருக்கு. அப்படி நடிச்சா, 'தளவாய் முத்தன்னா' பாத்திரத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன். எனக்கு ரொம்ப பொருத்தமா இருக்கும் அந்த கேரக்டர். எனக்கு ரொம்ப பிடிச்ச பாத்திரமும் கூட. ஆனால் இந்தப் படத்தை எப்போ பண்ணுவேன், எந்த நேரத்தில் அதற்கு கடவுள் உத்தரவு வரும்னு தெரியல... பார்க்கலாம்!" என்றார் ரஜினி.

விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் முடியும் வரை கிட்டத்தட்ட 3 மணி நேரம் அரங்கிலேயே இருந்தார் ரஜினி. இதனால் கூட்டமும் கடைசி வரை கலையாமல் இருந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற விஐபிக்கள் அனைவரும் ரஜினி சொன்ன கருத்தை வளியுறுத்திப் பேசினர். இனி அரசியல் கலப்பின்றி திரையுலகம் இயங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர்.

விழாவில் நடிகை லட்சும், நடிகர் - இயக்குநர் பிரபுதேவா உள்ளிட்ட கலைஞர்களை ரஜினி கவுரவித்தார்.