Monday, March 2, 2009

பசி, பட்டினியில் 18 தமிழர்கள் சாவு; மேலும் பலர் கவலைக்கிடம்...


வன்னி: வன்னிப் பகுதியில் சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாத அவல நிலையில் தமிழர்கள் பெரும் துயரத்தில் மூழ்கியுள்ளனர். கடந்த 4 நாட்களில் மட்டும் பட்டினிக்கு 10 சிறார்கள் உள்பட 18 பேர் பலியாகியுள்ளனர்.

வன்னிப் பகுதிக்கு சாப்பாடு, மருந்து என எந்த பொருளையும் அனுப்பாமல் தடை செய்து வருகிறது இலங்கை அரசு.

குண்டு வீசிக் கொல்வதும், காயமடைந்தவர்கள் மருத்துவ வசதியின்றி உயிரிழப்பதும் அங்கு தினசரிக் கதையாகி விட்டது. இந்த நிலையில் தற்போது பட்டினிச் சாவும் அங்கு அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.

கடந்த 4 நாட்களில் 10 சிறுவர்கள் உட்பட 18 தமிழர்கள் வன்னியில் பட்டினியால் உயிரிழந்துள்ளனர்.

தொடர்ச்சியான உணவின்மை காரணமாகவும் நீரிழப்பு காரணமாகவும் காய்ச்சல் போன்ற நோய்களுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் - நோய் எதிர்ப்புத் தன்மையை இழந்து விட்டதனாலும் - இவர்கள் உயிரிழந்திருக்கின்றனர் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இலங்கைப் படையினர் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் வான் மற்றும் எறிகணைத் தாக்குதல்கள் காரணமாக உணவுப் பொருட்களை பெற்றுக்கொள்ள வெளியே செல்ல முடியாத நிலையில் வீடுகளிலும் பதுங்குழிகளிலும் கூட இவர்களில் பலர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த நான்கு நாட்களில் உயிரிழந்த 18 பேர் தொடர்பாக ஆய்வு செய்த போது நடைபெற்ற மருத்துவ விசாரணைகளில் இவர்களின் சாவுக்கு போதிய உணவின்மை, ஊட்டமின்மை மற்றும் நோய் எதிர்ப்புத் தன்மை இழப்பு ஆகியவையே காரணம் என மருத்துவ வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

கனகசபை பிரவீணன், சிவநேசன் சுலக்சன், மகேஸ்வரன் கர்ணன், கருணாகரன் பிருந்தா, ஒன்றரை வயது குழந்தையான சபேசன் சிந்து, சிவகடாட்சம் கார்த்திகாயினி, பாலச்சந்திரன் சிவரூபன், சிவராசா சக்தி கணேசன், மலர்வேந்தன் மகிழன், யோகராசா ரவி, அனித் கிப்சன், பரமநாதன் புவியரசன் ஆகிய சிறார்களும், சிவராசா கண்ணன், மகிந்தன் விநோதா, தேவராசா கஜேந்திரன், சிவகடாட்சம் ரமணன், திருச்செல்வம் சிவகணேசன் ஆகியோரும் உயிரிழந்துள்ளனர்.

உணவு கிடைக்காமல் மயங்கிய நிலைக்குச் சென்று விட்ட ஐந்து பேர் மாத்தளன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உணவு மற்றும் மருத்துவ வசதி இல்லாத இதே நிலை தொடர்ந்தால் பட்டினி மற்றும் நோய் காரணமாக இன்னும் சில வாரங்களில் இழப்புக்கள் நூற்றுக்கணக்கில் அமையக்கூடும் எனவும் மருத்துவ தரப்பினால் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, உலக உணவுத் திட்டத்தின் கீழ் வர வேண்டிய உணவு வாகனங்கள் கடந்த ஒரு மாதமாக இந்தப் பகுதிக்கு வரவில்லை.

கடந்த இரண்டு நாட்களில் 5 வாகனங்களில் நிவாரணப் பொருட்கள் மட்டுமே உலக உணவுத்திட்டத்தால் செஞ்சிலுவைச் சங்க கப்பல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

சிறிலங்கா படையினரின் தொடர்ச்சியான வான் மற்றும் எறிகணைத் தாக்குதல்களினால் வளம் கொழிக்கும் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டு வந்த காய்கறிகளை பறிக்க முடியாத நிலையும் மரக்கறி வகைகளை பயிரிட முடியாத நிலை தோன்றியிருப்பதனாலும் மரக்கறி வகைகளுக்கு பெரும் தட்டுப்பாடு வன்னியில் ஏற்பட்டுள்ளது.

இங்கு தங்கியுள்ள மக்களில் 95 சதவீதம் பேர் ஒரு நேர உணவை மட்டுமே உண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இதனால் சிறுவர்களுக்கு ஊட்டச்சத்து என்பது முற்றிலும் இல்லாமல் போய் விட்டது. பெண்களும், கர்ப்பிணிகளும் படும் துயரத்தை சொல்லி மாள முடியாது.

டீ குடிக்கலாம் என்றால் அதற்குத் தேவையான தேயிலை, சீனி போன்றவை கூட கிடைப்பதில்லை.

தாக்குதலில் நேற்று 42 தமிழர்கள் படுகொலை:

இதற்கிடையே இலங்கைப் படையினர் வன்னிப் பிரதேசத்தில் நேற்று நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 42 பேர் கொல்லப்பட்டனர். 85 பேர் காயமடைந்தனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு மாத்தளன் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணி முதல் தொடர்ந்து ஆர்ட்டில்லரி, பலகுழல் வெடிகணை, மார்ட்டர் மற்றும் பீரங்கித் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் 37 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 65 பேர் காயமடைந்தனர்.

முள்ளிவாய்க்கால் பகுதியில் நடந்த தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர். 20 பேர் காயமடைந்தனர்.

பிரபாகரன் படத்துடன் கர்நாடக தமிழர்கள் போரணி!

பிரபாகரன் படத்துடன் கர்நாடக தமிழர்கள் பிரமாண்ட பேரணி!


பெங்களூர்: இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்து பெங்களூரில் கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம் சார்பில் பிரமாண்டமான பேரணி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மற்றும் அவரது இயக்கக் கொடிகளை கைகளில் ஏந்தியபடி கர்நாடக தமிழ் மக்கள் இந்தப் பேரணியில் பங்கேற்றனர்.

உடனடியாக போரை நிறுத்தி, தமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி ஆளுநரிடம் மனு கொடுத்தனர்.

இலங்கையில் சிங்கள அரசு நடத்தி வரும் போரால் அப்பாவி தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டு வருவதை கண்டித்து, கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம் சார்பில் பெங்களூரில் பிரமாண்ட பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது.

இந்த பேரணி நேற்று பெங்களூர் டவுன் ஹாலில் தொடங்கியது. இதற்காக ஆயிரக்கணக்கான தமிழர்கள் அங்கு திரண்டனர். மதியம் 2 மணிக்கு பேரணி தொடங்கியது.

இலங்கை தமிழ் எம்.பி. சிவாஜிலிங்கம் பேரணியை தொடங்கி வைத்தார். பேரணிக்கு கர்நாடக தமிழ் மக்கள் இயக்க தலைவர் ராசன் தலைமை தாங்கினார். பெரியார் திராவிட கழக செயலாளர் எல்.பழனி, கர்நாடக தமிழ் மக்கள் இயக்க நிர்வாகி மாரி, தமிழ் பிரமுகர்கள் பழனிகாந்த், செந்தில் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பிரபாகரன் மற்றும் புலிக்கொடி ஏந்தியபடி ஊர்வலம்!

திறந்தவெளி லாரியில் இலங்கை தமிழ் எம்.பி. சிவாஜிலிங்கம் உள்பட தமிழ் பிரமுகர்கள் சென்றனர். அதைத்தொடர்ந்து சாரை சாரையாக பல்வேறு தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்கள் பேரணியாக சென்றனர். அவர்கள் கையில் தமிழ் இனப் படுகொலையை கண்டிக்கும் வகையில் எழுதப்பட்ட பேனர்களை வைத்து இருந்தனர். இலங்கையில் கொல்லப்படும் அப்பாவி குழந்தைகளின் படங்களையும் பிடித்தப்படி சென்றனர்.

ஏராளமான தமிழர்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் படத்தைக் கையில் ஏந்தியப்படி வந்தனர். சிலர் தமிழீழப் படம் மற்றும் புலிகளின் சிவப்புக் கொடியை ஏந்தி உணர்ச்சி மயமான கோஷங்களுடன் சென்றனர்.

கொல்லாதே கொல்லாதே தமிழர்களை கொல்லாதே..,

இந்திய அரசே, இந்திய அரசே சிங்கள ராணுவத்துக்கு ஆயுதங்களை வழங்காதே..,

வெல்லட்டும் வெல்லட்டும் தமிழ் ஈழம் வெல்லட்டும்...,

மோதாதே மோதாதே தமிழனிடம் மோதாதே..,

ஈழ ரத்தம் எங்கள் ரத்தம்..,

புலிகள் மீதான தடையை நீக்கு,

இந்திய அரசே இந்திய அரசே போரை நிறுத்த நடவடிக்கை எடு..,

தமிழர் ரத்தம் குடிக்கும் ராஜபக்சேதான் பயங்கரவாதி...


என கோஷங்களை உரத்த குரலில் உணர்வுப் பொங்க எழுப்பினார்கள்.

பேரணியில் குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்கள், பெண்களும் ஆர்வத்தோடு கலந்து கொண்டு கோஷம் எழுப்பியபடி சென்றார்கள். பேரணிக்கு கோலார், ஷிமோகா உள்பட பல்வேறு இடங்களில் இருந்து தமிழர்கள் கலந்து கொண்டனர்.

ரூ.1 லட்சம் நிதி

அல்சூர் கேட் போலீஸ் நிலையம் அருகே பேரணி வந்தபோது பெருந்திரள் கூட்டத்தால் பேரணி ஸ்தம்பித்தது. அப்போது பயங்கர நெரிசல் ஏற்பட்டது. போலீசாருக்கும், பேரணி சென்றவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது.

டவுன்ஹாலில் புறப்பட்ட பேரணி மாநகராட்சி அலுவலகம் வழியாக பன்னப்பா பூங்காவை சென்றடைந்தது. அங்கு பொதுக்கூட்டம் நடந்தது. கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம் சார்பாக பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்கள் நலனுக்காக ஏற்கனவே திரட்டப்பட்ட ரூ.1 லட்சம் நிதியை சிவாஜிலிங்கத்திடம் வழங்கினார்கள். நிதியை பெற்றுக்கொண்ட சிவாஜிலிங்கம் நன்றி தெரிவித்து கொண்டார். அந்த நிதியை ஈழத்தமிழர் பேரவை அமைப்புக்கு வழங்குவதாக தெரிவித்தார். இந்த நிதியை கொண்டு 24 மணி நேரம் இயங்கும் ஈழத் தமிழர் தகவல் மையத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பொதுக்கூட்டத்தில் பல்வேறு தமிழ் அமைப்புகள் ராசனிடம் நிதி அளித்தனர். அந்த நிதியையும் அவர் பெற்று சிவாஜிலிங்கத்திடம் ஒப்படைத்தார்.

கவர்னரிடம் மனு

இதற்கிடையே ராசன் தலைமையில் தமிழ் பிரமுகர்கள் கவர்னர் மாளிகைக்கு சென்று மனு கொடுத்தனர். இலங்கையில் போரை நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

போலீஸ் பாதுகாப்பு

இதற்கிடையே பேரணி பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். மத்திய மண்டல துணை கமிஷனர் ரமேஷ் பாதுகாப்பு பணிகளை மேற்பார்வையிட்டார்.

எந்த சிறு அசம்பாவிதமும் இல்லாமல் பேரணி அமைதியான முறையில் நடந்து முடிந்தது.

கலைக் குளத்தில் கல்லெறியாதீர்கள்! - கன்னட விழாவில் கமல்


கன்னட திரைப்பட பவள விழா:மொழியால் திரையுலகைப் பிரிக்காதீர்! - கமல்

பெங்களூர்: மொழியை வைத்து கலை குடும்பத்தை உடைக்க வேண்டாம் என்று கன்னட திரைப்பட பவள விழாவில் நடிகர் கமலஹாசன் வேண்டுகோள் விடுத்தார்.

கன்னட திரைப்படத்துறை உருவாகி 75 ஆண்டு ஆனதைத் தொடர்ந்து பிரமாண்டமாக பவள விழா நடத்த கர்நாடக சினிமா வர்த்தக சபை முடிவு செய்தது. 3 நாட்கள் நடைபெறும் இந்த விழா நேற்று தொடங்கியது. இரவு 7 மணிக்கு விழாவை கர்நாடக முதல்வர் எடியூரப்பா குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

விழாவுக்கு கர்நாடக தகவல் துறை மந்திரி கட்டா சுப்பிரமணிய நாயுடு தலைமை தாங்கினார். இதில் நடிகர் கமலஹாசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

பார்வதம்மா ராஜ்குமார், கன்னட நடிகர்கள் விஷ்ணுவர்த்தன், அம்பரீஷ், நடிகைகள் சரோஜாதேவி, லட்சுமி, சவுகார்ஜானகி, தென்னிந்திய சினிமா வர்த்தக சபை தலைவர் ராஜகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் நடிகர் கமலஹாசன் பேசியதாவது:

அரசியல் லாபத்துக்காக யாரும் கலையை பயன்படுத்த வேண்டாம். கலை வேறு, அரசியல் வேறு. கலைக்கும், அரசியலுக்கும் மக்களை ஈர்க்கும் சக்தி இருந்தாலும் நிச்சயம் இரண்டும் வேறுபட்டது. அது எண்ணையும், தண்ணீரையும் போன்றது.

நான் தமிழன். அதை மாற்ற முடியாது. ஆனால் எப்படிபட்ட தமிழன் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். குண்டுராவ் நாகேஷ் என்ற பெரிய நடிகரை எங்களுக்கு தாரை வார்த்து கொடுத்த போது அவரை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டோம். சரோஜாதேவியை எங்களது சொத்தாக மதிக்கும் தமிழன். புட்டனகனகல் போன்ற பல்வேறு கன்னட மகான்களை மரியாதையோடு நடத்திய தமிழன்.

தமிழகத்தில் கொடிகட்டிப் பறக்கும் சிவாஜிராவ் கெய்க்வாட் என்ற இயற்பெயர் கொண்ட ரஜினிகாந்த் என்ற எனது சக மாணவரை, போட்டியாளரை எங்களுக்கு சொந்தமாக்கிக் கொண்ட தமிழன்.

இந்த சேதியைச் சொல்லத்தான் இந்த விழாவில் நான் கலந்து கொண்டேன்.

நூற்றாண்டு விழாவுக்கும் வருவேன்!

கலை குடும்பத்தை ஒருபோதும் உடைக்க முடியாது. கலை என்னும் குளத்தில் கல்வீச நினைக்க வேண்டாம். எனது சித்தியான கன்னட சினிமா துறையின் நூற்றாண்டு விழாவுக்கும் என்னை அழையுங்கள். அப்போதும் எனக்கு பேச வாய்ப்பு கொடுங்கள். அப்போது என்னை வயதான கிழவன் என்று ஒதுக்கி விட வேண்டாம். நூற்றாண்டு விழாவில் நாம் மீண்டும் சந்திப்போம், என்றார் கமல்ஹாசன்.

ரஜினி எப்போது?

இன்றைய நிகழ்ச்சிகளில் கமல் மட்டுமே பங்கேற்றார். தனது நெருங்கிய நண்பர் மோகன் பாபுவின் வீட்டுத் திருமண விழாவுக்குச் சென்ற ரஜினி இன்று அல்லது நாளை கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.

குறிப்பு: வழக்கத்தை விடவும் சற்று கடுமையான தமிழில் அமைந்திருந்தது கமல் பேச்சு. அதன் எளிய வடிவத்தை இங்கே தந்துள்ளோம். ஒரிஜினல் பேச்சு இணைப்பாகத் தரப்பட்டுள்ளது!!

ரஹ்மானுக்கு தங்கச் சங்கிலி அணிவித்து இளையராஜா பாராட்டு!


ப்பாடா... ஒரு பெரிய பிரச்சினை தீர்ந்துடுச்சுப்பா...

இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் ஆஸ்கார் விருதுகளை வாங்கினாலும் வாங்கினார்... அடுத்த நொடியில் அவருக்கு வாழ்த்துச் சொல்லக் கூட பலருக்கும் தோன்றவில்லை.

'ரஹ்மானுக்கு இளையராஜா வாழ்த்துச் சொன்னாரா?'

'இன்னும் இல்லையா...? அவருக்குப் பொறாமை... அவர் காலம் முடிந்துவிட்டது... அந்த வயித்தெரிச்சல்ல பாராட்டுத் தெரிவிக்கவில்லை'

'ராஜா ஒரு இசையமைப்பாளரா... ரஹ்மான்தான் தி பெஸ்ட்...'

-இப்படி ஆளாளுக்கு கிளம்பிவிட்டார்கள்.

அட, கிளம்பியவர்கள் வெறும் வாயை மென்றதோடு நில்லாமல், வளைகளிலும் கயிறு திரிக்க, இந்த ஒரு வாரமாக இதே பேச்சு, எழுத்து எந்த வலையைத் திறந்தாலும். இரண்டு மேதைகள் நம்முடன் இருக்கிறார்களே, என்ற சந்தோஷமும் பெருமையும் பெரும்பாலானோருக்கு இல்லாமல் போனது நமது பண்பாட்டுக்கு இன்னொரு உதாரணம்... போகட்டும்!

நல்ல வேளை அதற்கொரு முற்றுப் புள்ளி வைத்துவிட்டார் இசைஞானி இளையராஜா. நேற்று காலை ஹைதராபாத்தில் நடந்த மோகன்பாபு மகன் திருமணத்தில் கலந்து கொண்ட ராஜா, இந்த நிகழ்ச்சிக்காக பிற்பகலிலேயே சென்னை திரும்பிவிட்டார்.

நேற்று மாலை (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் திரை இசைக் கலைஞர்கள் சங்கம் சார்பில் நடந்த பாராட்டு விழாவில், ரஹ்மானின் ஆஸ்கார் சாதனைகளைப் 'போதும் போதும்' எனும் அளவுக்குப் பாராட்டியதோடு, ஆஸ்கர் வென்ற தன் அருமை மாணவருக்கு தங்கச் சங்கிலி அணிவித்து தன் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொண்டார்.

ரஹ்மானைப் பாராட்டி அவர் பேசுகையில், 'உலகில் மிகச் சில இசையமைப்பாளர்களுக்குத்தான் அளவிட முடியாத திறமையும், அதை பெரிய அளவில் எடுத்துச் செல்லும் முயற்சியும் உள்ளது. அந்த மாதிரி அரிய கலைஞர்களில் ஒருவர் ஏஆர் ரஹ்மான். இசையமைப்பாளர்களில் அவர் ஒரு அரிய சாதனையாளர். அண்ணன் எம்எஸ்வி அவர்கள்தான் இந்த இசைத் துறையின் ஆதார ஸ்ருதி என்றால் நானும் தம்பி ரஹ்மானும் பஞ்சமங்கள். அதனால்தான் அவருக்கு ஒரு விருது போதாது எனப் புரிந்து இரண்டு விருதுகளாகக் கொடுத்துள்ளது ஆஸ்கர் விருதுக் குழு', என்றார்.

விழாவில் ரஹ்மான் பேசியதாவது:

எல்லா புகழும் இறைவனுக்கே. எங்கப்பா ஆசியால்தான் எனக்கு ஆஸ்கார் விருது கிடைத்து இருப்பதாக எல்லோரும் சொல்கிறார்கள். அதுவும் உண்மைதான். அவர் பட்ட கஷ்டத்திற்கு நான் அறுவடை செய்திருக்கிறேன்.

கடந்த 10 வருடங்களாக ஒவ்வொரு முறை ஆஸ்கார் விருது வழங்கப்படும் போதும் சீனா, ஐப்பான், இத்தாலி ஆகிய நாட்டை சேர்ந்தவர்களுக்கே விருதுகள் கிடைத்து வந்தது.

அந்த விருதை இந்தியா வாங்க முடியாதா என்று பல முறை நினைத்து இருக்கிறேன். இங்கே இளையராஜா, எம்.எஸ். விஸ்வநாதன், கே.வி.மகாதேவன், நவுஷாத் போன்ற மேதைகள் எல்லாம் இருக்கிறார்கள். இளையராஜா மீது எவ்வளவு மரியாதை வைத்திருக்கிறீர்கள், வெளிநாடுகளில் அவர் இசைக்கு எந்த அளவு மரியைாதை உள்ளது என்பதை நான் நேரில் பார்த்து பெருமிதப்பட்டிருக்கிறேன். இது ஆஸ்காரை விட பெரிய மரியாதை. ஆஸ்கருக்கு அப்பாற்பட்ட மிகச் சிறந்த மேதைகள் இவர்கள் எல்லோரும்.

இது எனக்குக் கிடைத்த விருதல்ல!

எனக்கு நேரமே கிடைக்காத சூழ்நிலையில்தான் ஸ்லாம்டாக் மில்லினர் படத்திற்கு இசையமைத்தேன். அந்த படத்திற்கு நான் இசையமைக்க எடுத்துக்கொண்ட காலம் 3 வாரங்கள்தான். அந்த இசையை நான் ஆஸ்கருக்கு சமர்ப்பித்தபோது அமெரிக்கர்கள் எல்லாம் என்னைப் பார்த்து புன்னகைத்தார்கள்.

ரோஜா படத்திற்கு இசையமைத்தபோது அதன் பாடல்களை கேட்டு மற்றவர்கள் எல்லாம் எப்படி புன்னகைத்தார்களோ அதே போன்று புன்னகையை அந்த அமெரிக்கர்களின் முகத்தில் பார்த்தேன்.

ஆஸ்கார் விருதுகளை எனக்கு கிடைத்ததாக நான் நினைக்கவில்லை. இங்கிருக்கும் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா போன்ற பெரிய மேதைகளுக்கு கிடைத்த விருதாகவே கருதுகிறேன். பாலமுரளி கிருஷ்ணா பேசும்போது, இசையின் ஆழத்தை உணர முடிந்தது. இசையமைப்பாளர்கள் அனைவரும் பரந்த மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பதற்கு நன்றி.

மோசமான வலையுலக 'கமெண்டர்'களுக்குக் குட்டு!

இந்த சந்தோஷத்திலும் எனக்கு ஒரு வேதனை உண்டு. ஒவ்வொரு இசை கலைஞர்களுக்கும் குறிப்பிட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். பல இணையதளங்களில் என்னை வாழ்த்துவதற்காக இன்னொருவரை தூற்ற வேண்டாம். என்னையும் இளையராஜா சாரையும் ஒப்பிட்டு மோசமாக சிலர் எழுதுவதைப் பார்க்கும்போது வேதனையாக உள்ளது. என் ரசிகர்களை நான் கேட்டுக்கொள்வது, தயவுசெய்து எல்லாம் யாரையும் திட்டாதீர்கள். ஒப்பிட்டுப் பேசாதீர்கள், என்றார் ரஹ்மான் (ரஹ்மான் அனைத்து செய்திகளையும் படிப்பதே இணைய தளத்தில்தான். நிறைய பிளாக்குகள் படிப்பார். அவரே தனது இணையதளத்தில் தன்னைப் பற்றி இணையத்தில் வருகிற தகவல்களைச் சேகரிக்கவும் தொடங்கியுள்ளார்.).

ஹாரிஸ் ஜெயராஜ் மோதிரம் பரிசு!

விழாவில் டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா, எம்.எஸ்.விஸ்வநாதன், பட அதிபர் ஏவி.எம்.சரவணன், இயக்குநர் கே.பாலசந்தர், இசையமைப்பாளர்கள் தேவா, வித்யாசாகர், ஹாரிஸ் ஜெயராஜ், பரத்வாஜ், தேவி ஸ்ரீபிரசாத், சங்கர் கணேஷ், யுவன்சங்க ராஜா, பின்னணி பாடகர்கள் டி.எம்.சவுந்தராஜன், மனோ, பாடகிகள் எல்.ஆர்.ஈஸ்வரி, எஸ்.ஜானகி ஆகியோரும் பேசினார்கள்.

நிகழ்ச்சியின் போது ஏ.ஆர்.ரகுமானுக்கு மோதிரம் அணிவித்தார் ஹாரிஸ் ஜெயராஜ். சங்கர் கணேஷ், ஏ.ஆர்.ரகுமானை கட்டிப்பிடித்து அவர் கன்னத்தில் முத்தம் கொடுத்தார்.

விழா குழு சார்பில் ஏ.ஆர்.ரகுமானுக்கு ரூ.2 லட்சம் மதிப்புள்ள வெள்ளியால் ஆன உலக உருண்டை நினைவு பரிசாக வழங்கப்பட்டது.
-எஸ்எஸ்

மோகன் பாபு மகன் திருமணத்தில் ரஜினி!


நடிகர் மோகன் பாபுவின் மூத்த மகன் விஷ்ணு மஞ்சு பாபுவுக்கும் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் சகோதரர் ஒய்எஸ் சுதீகர் ரெட்டியின் மகள் விரானிகாவுக்கும் நேற்று பிரமாண்டமான முறையில் திருமணம் நடந்தது.



ஹைதராபாத் கச்சிபௌலி உள்விளையாட்டு அரங்கில் நடந்த இந்த திருமணத்துக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி, அவர் மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

இசைஞானி இளையராஜா, இயக்குநர் பி.வாசு உள்பட பலரும் பங்கேற்றனர்.


ஆந்திர திரையுலகமும் அரசியல் தலைவர்களும் திரண்டு வந்து மணமக்களை வாழ்த்தினர்.

சூப்பர் ஸ்டாரிடம் பாராட்டுப் பெற்ற வெண்ணிலா கபடி குழு புது ஹீரோ!


ஒருவரைப் பாராட்டுவது என்று முடிவு செய்துவிட்டால், வஞ்சனையில்லாமல் பாராட்டி மகிழ்வார் ரஜினி. ஆனால் யாரைப் பாராட்ட வேண்டும், எதற்காகப் பாராட்ட வேண்டும் என்பதில் மிகத் தெளிவாகவே இருப்பார்!

இந்த புத்தாண்டு பிறந்ததிலிருந்து வெளியான படங்களில் அவர் பார்த்து பாராட்டிய படங்கள் அமோகமாகவே ஓடிக் கொண்டிருக்கின்றன.

அதாவது ரஜினி பாராட்டியதால்தான் அவை ஓடுகின்றன என்று நாம் சொல்ல வரவில்லை. ரஜினியின் பாராட்டுக்கள் அந்த நல்ல படங்களை இன்னும் பட்டிதொட்டியெல்லாம் கொண்டு போய்ச் சேர்த்துள்ளன.

நான் கடவுள், பாலா இயக்கத்தில் வெளிவந்துள்ள படம். மிகப் பெரிய எதிர்பார்ப்புகளுடன் வந்த அந்தப் படத்தின் வர்த்தகத்துக்கு ரஜினியின் பாராட்டு எந்த அளவு உதவியது என்பதை, படத்தின் 10வது போஸ்டர்களைப் பார்த்தவர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள்.

முன்பே ரஜினி பார்த்துப் பாராட்டிய படம் வெண்ணிலா கபடிக் குழு. இந்தப் புத்தாண்டுக்குப் பிறகு வெளியான படங்களில் நின்று ஓடிக் கொண்டிருப்பவை இவை இரண்டு படங்கள்தான்.

நேற்று அந்தப் படத்தின் 30-வது நாளுக்கு, மாநிலம் முழுக்க போஸ்டர் அடித்து ஒட்டியிருக்கிறார்கள், சூப்பர் ஸ்டார் தங்களுடன் நிற்கும் ஸ்டில்லை பெரிதாக வைத்து.

நான் கடவுள், வெண்ணிலா கபடிக் குழு இரண்டுமே அருமையான படங்கள். அந்த நல்ல படங்கள் இன்னும் அதிக மக்களைச் சென்று சேர ரஜினியின் இந்த பாராட்டுரைகள் உதவியிருக்கின்றன. திரையுலகில் முதல் நிலை வகிக்கும் ஒரு கலைஞர், தனக்கடுத்த தலைமுறை நடிகர்கள், கலைஞர்கள் சிறப்பாக வரவேண்டும் என்ற நல்லெண்ணத்தில், யாருடைய வற்புறுத்தலுமின்றி ரஜினி செய்து வரும் நல்ல விஷயங்கள் இவை. அடுத்தவரை மனசார பாராட்டுவதற்கும் ஒரு மனசு வேண்டுமல்லவா!(ப்ரிவியூ ஷோவில் உதட்டில் புன்னகையும், மனதுக்குள் நக்கலுமாக கைகுலுக்கிவிட்டுப் போவார்களே... அந்த உலகில் இப்படியொரு பாராட்டு அரிதல்லவா!)

இன்னொன்று ரஜினி என்பவர் தனி மனிதரல்ல... அவரை நேசிக்கும் கோடிக்கணக்கான மக்கள், பின்பற்றும் தீவிர ரசிகர்களைக் கொண்டவர். அறிவுஜீவிகள் இதை ஒரு பிம்பம் என்று சொல்லி தன் வக்கிரத்தைத் திருப்திப்படுத்திக் கொள்ளலாம். ஆனால் உண்மை எல்லாருக்கும் என்னவென்று எல்லாருக்குமே தெரியும்தானே!

தான் ஒரு படத்துக்குத் தரும் பாராட்டும் நற்சான்றும் தன்னைச் சார்ந்தவர்களில் ஒரு குறிப்பிட்ட சதவிகித்தினரையாவது அந்தப் படம் ஓடும் திரையரங்குகளுக்குக் கொண்டு செல்லும் என்பது அவருக்கும் தெரியும். அதுதான் ரஜினியின் பாராட்டினால் ஒரு தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் கிடைக்கிற நேரடி பலன்!

அதேநேரம் சரியான ஒன்றை மட்டுமே அவர் எப்போதும் முன்னிறுத்துவதையும் கவனிக்க வேண்டும்.

சில தினங்களுக்கு முன் வெண்ணிலா கபடிக்குழு படம் பார்த்து பாராட்டியதோடு நில்லாமல், அந்தப் படத்தில் சிறப்பாக நடித்திருந்த புதுமுகம் விஷ்ணுவையும் மண்டபத்துக்கு வரவழைத்துப் பாராட்டி இன்ப அதிர்ச்சி தந்துள்ளார் சூப்பர் ஸ்டார்.

ஒரு தேசிய விருதுக்குச் சமமான பெருமையை, மகிழ்ச்சியை இந்த சந்திப்பு தந்ததாக சிலிர்க்கிறார் புதுமுகம் விஷ்ணு, அந்த நிகழ்வை நினைத்து.

'உண்மைதாங்க... நானெல்லாம் தலைவர் படத்தை பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ பாக்குற ஆளுங்க. அவரை நேர்ல பார்ப்பேன், இவ்வளவு பெரிய பாராட்டை வாங்குவேன்னு சத்தியமா கனவு கூட காணலை. எனக்கு தலைவர் பாராட்டே தேசிய விருது மாதிரிதான். என்னையெல்லாம் கூப்பிட்டுப் பாராட்டறார்னா அவருக்கு எவ்வளவு பெரிய மனசு...', என்கிறார் விஷ்ணு.

மேலும் கூறுகையில், 'முதல்படமே நல்லா பண்ணியிருக்கீங்க... இனி நிறைய வாய்ப்புகள் வரும், வர்ற எல்லாத்தையும் ஒப்புக்காம, நல்ல குழு, கதை இருக்கிற படமா பாத்து கமிட் ஆகுங்க, என்று ரஜினி சார் சொன்னதை வாழ்க்கையின் மந்திரமாக கடைப்பிடிப்பேன்', என்கிறார்.

ரஜினியின் சிறப்பு இதுதான். அவரது வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவர் அனுபவத்திலிருந்தே பிறந்தவை என்பதால்தான், எளிமையாக இருந்தாலும் அவற்றுக்கு வலிமையும் அதிகம்!

-ரசிகன்

Monday, February 2, 2009

கலைஞர் வளர்தெடுத்த அரசியல் நாகரீகம்!


கலைஞர் இனி ராஜபக்சேவின் ராஜதந்திரம், பெருந்தன்மை குறித்தும் பேசலாம்!

உடன்பிறப்பே, நான் திமுக தலைவர் பதவியை ராஜினாமா செய்வதற்காக, நீங்கள் யாரும் உணர்ச்சிவசப்பட்டு தீக்குளிக்க வேண்டாம்… என்று அவர் சொல்லி முடித்த மறுநாள் காலை நான்கைந்து பேர் உயிருடன் கொளுத்திக் கொண்டதாக செய்தி வந்தது, முன்பொருமுறை.

ஒரு விஷயத்தை ‘செய்யாதீர்கள்…அரசியலாக்காதீர்கள்’ என கலைஞர் மு. கருணாநிதி குறிப்பிட்டுச் சொல்கிறார் என்றால், அந்த விஷயத்தை அவர் தீவிரமாகச் செய்யப்போகிறார் என்று அர்த்தம்.

ஈழத் தமிழர் விஷயத்திலும் இப்போது இதே பாணி அரசியலை கலைஞர் கையிலெடுத்திருக்கிறார். ‘முத்துக்குமார் தீக்குளித்த சம்பவத்தை அரசியலாக்காதீர்கள்… இம்மாதிரி தீக்குளிப்புகளை ஊக்கப்படுத்தாதீர்கள்’ என இந்தப் பக்கம் அறிக்கை விட்டுவிட்டு, இன்னொரு பக்கம், அதை தீவிர அரசியலாக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளார். முத்துக்குமார் தீக்குளிப்பால் தமிழர்கள் மத்தியில் ஏற்பட்டுவிட்ட உணர்ச்சிப்பூர்வ போராட்ட நிலையை அடக்க முயலும் அரசியல் இது.

ஈழப் பிரச்சினையில் கலைஞர் அரசின் கையாலாகாத நிலையைக் கடுமையாகவே விமர்சித்திருந்த முத்துக்குமார், தன் மரணத்தை துருப்புச் சீட்டாக வைத்து போராடி ஈழப் பிரச்சினைக்குத் தீர்வு காணுங்கள் என தனது வாக்குமூலமாக அளித்த துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிட்டிருந்தார். இதனால் முத்துக்குமாரின் உடலுக்கு மரியாதை செலுத்த வந்த திமுக எம்எல்ஏ பாபுவை துரத்தியடித்தனர் மாணவர்கள். இன்னொரு பக்கம் அரசு அறிவித்த நிதியையும் முத்துக்குமார் குடும்பம் பெற்றுக் கொள்ள மறுத்துவிட்டது.

இதில் கடுப்பாகிவிட்ட கலைஞர், எங்கே முத்துக்குமாரின் மரணத்தை வைத்து, தமிழகத்தின் பிரதிநிதிகளாக வைகோ, ராமதாஸ் உள்ளிட்டவர்கள் தங்களைக் காட்டிக் கொள்வார்களோ என்ற பயத்தில், முத்துக்குமார் மறைவை அரசியலாக்காதீர்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதுவே முத்துக்குமாரின் தீக்குளிப்பு திமுகவுக்கு அனுசரணையாக இருந்திருந்தால், கலைஞரின் அறிக்கை எப்படியெல்லாம் வர்ணம் பூசி வந்திருக்கும் என யோசித்துப் பாருங்கள்.

செத்தவன் வீட்டில் அரசியல் செய்வதுதான் திராவிட அரசியலின் ஆரம்பமே. மொழிப்போர் தியாகிகள் என ஆரம்பித்து இப்போது ஈழப் போர் தியாகியாகிவிட்ட முத்துக்குமார் மரணம் வரை, அரசியலுக்கான முதல் விதையை ஊன்றுவதே திமுக அல்லது அதன் சார்பு அமைப்புகளாகத்தான் இருந்து வந்துள்ளன.

இப்போது தமிழகத்தில் தன்னெழுச்சியாக பரவியிருக்கும் ஈழ ஆதரவு நிலைப்பாட்டை தலைமையேற்று நடத்தியிருக்க வேண்டியதே கலைஞர்தான்.

இப்போது அவர் சார்ந்த ஊடகங்கள் திடீரென புலியெதிர்ப்புப் பிரச்சாரத்துக்கு மாறிவிட்டன. இதுவரை புலிகளின் அறிக்கைக்கு முக்கியத்துவம் தந்து வந்தவர்களுக்கு, இப்போது ராஜபக்சே பிரதர்ஸ் தருவதே அதிகாரப்பூர்வ செய்திகிவிட்டது. கலைஞரும் அவரைச் சார்ந்த ஊடகங்களும் இனி ராஜபக்சேவின் ராஜதந்திரம், பெருந்தன்மை குறித்தும் பேசலாம்!

உண்ணாவிரதம், கடையடைப்பு, பந்த் போன்றவற்றுக்கு எப்போதுமே வக்காலத்து வாங்கும் கலைஞருக்கு, அதையே மற்ற தலைவர்கள் செய்யும்போது கோபம் பொத்துக் கொண்டு வருகிறது. இன்று சட்டத்தின் ஏகபோகக் காவலராகிவிட்டார், ஒரு காலத்தில் அரசியல் சட்ட நகலெரித்த இந்த பகுத்தறிவுவாதி.

சேது சமுத்திரத்துக்காக இவர் அறிவித்த வேலை நிறுத்தம், உருக்கமான அறிக்கைகளையெல்லாம் அத்தனை சுலபத்தில் மறந்துவிட்டாரே மனிதர்!

சோனியா காந்தியின் புலிகள் பழிவாங்கும் படத்துக்கு ஆதரவாகவும், காங்கிரஸ் கூட்டணியை விட்டுவிட்டால் அரசியலில் தனது வாரிசுகளுக்கு எதிர்காலமே இல்லாமல் போய்விடுமோ என்ற நம்பிக்கையின்மையும்தான் இன்று கலைஞரை மாறி மாறி குட்டிக்கரணமடிக்க வைத்துள்ளன.

தமிழினத் தலைவராக இவரை உருவகப்படுத்திக் கொண்டாடிக் கொண்டிருந்த தமிழர்கள் நிஜமாகவே பரிதாபத்துக்குரியவர்களே!

-எஸ்எஸ்
http:/www.envazhi.com