Showing posts with label Rajini Pera Kettalae. Show all posts
Showing posts with label Rajini Pera Kettalae. Show all posts

Monday, December 1, 2008

படிக்கிறது ராமாயணம், இடிக்கிறது ...?

ண் டாக்டருக்குப் படிச்சுட்டு ரஜினிகாந்தைப் பத்தி புஸ்தகம் எழுதப் போறேங்கிறயே... என்று ஆரம்பத்தில் என் அப்பா திட்டினார். ஆனா அப்புறம் இந்தப் புஸ்தகத்துக்குக் கிடைச்ச பேரைப் பார்த்துட்டு அமைதியாகிட்டார். இப்ப மோதிரம் போடும் அளவு மாறிட்டார். ஆனா... கண் டாக்டருக்குப் படிச்சுட்டு ஒரு நடிகரைப் பத்தி புஸ்தகம் எழுதப் போறாளேங்கிற மாதிரி என் மாமனார் மாமியார் பேசலை...'

-இப்படிப் பேசியவர் டாக்டர் காயத்ரி. நேற்று வரை யாரென்றே தெரியாமல் இருந்து இன்றைக்கு ரஜினி என்ற மந்திர வார்த்தைகளை பக்கம் பக்கமாக எழுதியதன் மூலம் தமிழ்நாட்டின் பிரபல புள்ளியாக மாறிவிட்ட அதே டாக்டர் காயத்ரிதான் இப்படிப் பேசினார் நேற்றைய மேடையில்.

நான்கு எழுத்தாளர்கள் வந்துவிட்டால், அவர்கள் மத்தியில் தன்னை ஒரு நடிகருக்குப் புத்தகம் எழுதியவர் என்று காட்டிக் கொள்ள வெட்கம் வந்து விடுகிறது பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு. தானும் அந்த வகையைச் சேர்ந்தவர் என்பதை காயத்ரியே ஒப்புக் கொள்வது போலிருந்தது அவர் பேசிய விதம்.

தலைவரைப் பற்றி புத்தகம் எழுதியவரை இப்படி விமர்சிக்கிறீர்களே என சிலர் கேட்கக் கூடும். தானாக வலிய வந்துதான் இவர் இந்தப் புத்தகத்தை எழுதினார். இப்படியொரு புத்தகம் எழுதினால் அதன் வீச்சு எப்படி இருக்கும், எந்த அளவுக்குப் பேசப்படுவோம் என்று தெரிந்துதான் மருத்துவத் தொழிலைக் கூட விட்டுவிட்டு இந்த வேலையில் இறங்கினார் (கவனிக்க: இவர் ரஜினி ரசிகர் அல்ல. அவர் மீதுள்ள ப்ரியத்திலும் இதை எழுதவில்லை). அதற்குள் அறிவுஜீவித்தனம் எட்டிப்பார்த்து ஆறாவது அறிவை அடக்கிவிட்டதோ...!

இதைச் சுட்டிக் காட்டவே இந்தக் குட்டு!

தலைமுறைகளைக் கடந்த சாதனையாளர் ரஜினி - கனிமொழி

மிழில் இருவருக்கு மட்டும்தான் அனிமேஷன் எனப்படும் கார்ட்டூன் படங்கள் வெளிவரவுள்ளன. ஒருவர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர். அடுத்தது ரஜினி அவர்கள். இதற்குக் காரணம் குழந்தைகளுக்கும் பிடித்த நாயகர்களாக, அனைத்துத் தரப்பினரையும் ஆகர்ஷிக்கும் திறன் கொண்டவர்களாக அவர்கள் திகழ்வதுதான், என்றார் கவிஞர் கனிமொழி எம்பி.

ரஜினியின் வாழ்க்கை வரலாற்று நூலை வெளியிட்ட அவர் பேசியதிலிருந்து:

தலைமுறைகளைக் கடந்தும் எப்படி ரஜினிக்கு மட்டும் இன்னமும் அதே ரசிகர் கூட்டமும், ஈர்ப்பு சக்தியும் உள்ளது என்ர ஆச்சரியம் பலருக்கு உண்டு. குழந்தைகளைக் கவரும் விதத்தில் நடிப்பது சாதாரண விஷயமல்ல. குழந்தைகளின் உலகில் அவர்களே நீதிபதிகள். அவர்கள் யாருடைய தீர்ப்பையும் ஏற்பவர்கள் அல்ல. தங்களுக்குப் பிடித்தவற்றை தாங்களே தீர்மானிக்கிறார்கள்.

அந்தக் குழைந்தைகளின் மனம் கவர்ந்த ஹீரோக்கள் என்றால் இங்கு இருவர்தான், ஒருவர் மக்கள்திலகம் எம்ஜிஆர். அடுத்தது ரஜினி அவர்கள். தமிழில் இந்த இருவருக்கு மட்டும்தான் அனிமேஷன் எனப்படும் கார்ட்டூன் படங்கள் வெளிவரவுள்ளன.

இதற்குக் காரணம் குழந்தைகளுக்கும் பிடித்த நாயகர்களாக, அனைத்துத் தரப்பினரையும் ஆகர்ஷிக்கும் திறன் கொண்டவர்களாக அவர்கள் திகழ்வதுதான்.

என் தலைமுறையிலும் மிகச் சிறந்த நடிகராக ரஜினி அவர்கள் திகழ்ந்தார்கள். எனக்கு முந்தைய தலைமுறை, அதாவது அவர் படம் நடிக்க ஆரம்பித்த வருடங்களில், ஆரம்ப படத்திலேயே அனைவரையும் வசியப்படுத்தினார்கள். இதோ எனக்கு அடுத்த இரு தலைமுறைக்கும் அவர்தான் புகழ்பெற்ற நாயகனாகத் திகழ்கிறார். இது சாதாரண விஷயமல்ல.

பத்து ஆண்டுகளில் நான்கு படங்களில் மட்டும்தான் நடித்திருக்கிறார். ஆனால் மக்களை அப்படியே தன் பக்கம் ஈர்த்து வைத்துள்ளார். இது எப்படி சாத்தியம் என்ற ஆச்சர்யம் பலருக்கும் இருக்கிறது. அதுகுறித்து இந்தப் புத்தகத்தில் கூட ஒருவர் ஆச்சரித்துடன் குறிப்பி்டுகிறார்.

நான் இங்கே கேட்டுக் கொள்ள விரும்புவது, ரஜினி அவர்களைப் பற்றி இன்னும் பல பரிமாணங்கலில் நிறைய புத்தகங்கள் நடுநிலைப் பார்வையுடன் வரவேண்டும் என்பதுதான். அப்போதுதான் அவரைப் பற்றியும் அவரது கடின உழைப்பு குறித்தும் மக்கள் புரிந்து கொள்வார்கள். காலத்தையும் மக்களின் ரசனையையும் பிரதிபலிக்கிற ஒரு முக்கிய ஆவணமாக அவை திகழும், என்றார் கனிமொழி.

எம்ஜிஆருக்குப் பின் ரஜினிதான்! - மதன்

75 ஆண்டு கால தமிழ் சினிமா வரலாற்றில் சிறந்த பொழுதுபோக்குப் படங்களைத் தருவதிலும், குழந்தைகளையும் கவரும் தனித் தன்மையிலும் அமரர் எம்ஜிஆருக்குப் பின் சிறந்து விளங்குபவர் ரஜினி மட்டும்தான் என்கிறார் கார்ட்டூனிஸ்ட் மதன்.

மதனின் ஒவ்வொரு கோடுகளுக்கும் தனி அர்த்தம் இருப்பதைப் போலவே, ஒவ்வொரு வார்த்தைக்கும் பல அர்த்தங்கள் உண்டு. ரஜினி என்ற மாபெரும் கலைருக்குள் உள்ள கலை, அரசியல், மனிதாபிமானம் பற்றி, இன்றைய பத்திரிகையாளர்களில் அதிகம் தெரிந்தவர் மதன்.

அது மட்டுமல்ல, பெரும்பாலான எழுத்தாளர்கள் தங்கள் தலைக்குப் பின்னால் ஏதோ ஒரு ஒளிவட்டம் சுழல்வதாக தலைக் கனத்துடன் பேசித் திரியும் இன்றைய சூழலில் எதையும் வெளிப்படையாகப் பேசுபவர் மதன். ஒரு நல்ல ரசிகர், நல்ல எழுத்தாளரால்தான் இப்படி மனம் திறந்து பாராட்ட முடியும் என்பதால் இதைக் குறிப்பிடுகிறேன். (அவரது முகாம், அவர் வளர்ந்த பின்னணி குறித்தெல்லாம் நாம் கவலைப்படத் தேவையில்லை.)

ரஜினி பேரக் கேட்டாலே... எனும் தலைப்பில் தமிழில் டாக்டர் காயத்ரி எழுதிய சூப்பர் ஸ்டார் ரஜினியின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் நேற்று மாலை சவேரா ஓட்டலில் வெளியிடப்பட்டது.

கவிஞரும் திமுக எம்பியுமான கனிமொழி கருணாநிதி முதல் பிரதியை வெளியிட, எழுத்தாளரும் கார்ட்டூனிஸ்டுமான மதன் மற்றும் இயக்குநர் எஸ்பி முத்துராமன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

இந்த விழாவின் சிறப்பம்சம் மதன் மற்றும் எஸ்பி முத்துராமனின் சிறப்பான பேச்சுதான். ரஜினியைப் பற்றி எந்தவித அலங்காரங்களும் இல்லாத அவர்கள் பேச்சு உண்மையிலேயே நிறைவாய் இருந்தது. மற்றபடி இந்த விழாவில் சில நெருடல்களும் உண்டு. அதை பின்னர் பார்க்கலாம்!

மதன் பேச்சிலிருந்து...
நடிகரின் வாழ்க்கை வரலாறு என்றதுமே சிலர் ஆஹா என்பார்கள். இன்னும் சிலர் ஓ என்ற சின்ன பார்வையுடன் நகர்ந்து விடுவார்கள். எழுதுபவருக்குப் புகழ் கிடைத்தாலும், அவர் எழுத்துக்கு பெரும்பாலும் அங்கீகாரம் கிடைக்காது.

இதற்குக் காரணம் ஒரு நடிகரின் வாழ்க்கை வரலாற்றை எழுதுவதில் உள்ள சிக்கல்கள். அதாவது ரெண்டுவித சிக்கல்கள் இருக்கு. பெரும்பாலும் ஏதாவது ஒரு சினிமா பத்திரிகை நிருபர் தனி வேலையாக அதை எடுத்துக் கொண்டு எழுதுவார். அதில் பெரும்பாலும் உண்மைகள் விடுபட்டு, வெறும் புகழ்ச்சிதான் மேலோங்கியிருக்கும். ஒரு தலைவரின் வாழ்க்கை வரலாற்றை அவரது தொண்டர்கள் யாரேனும் எழுதினாலும் இந்த நிலைதான்.

இன்னொன்று பிரபல எழுத்தாளர்கள் எழுத முன்வருவதில்லை. அப்படியே எழுதினாலும் அதில் விமர்சனம் நிறைந்திருக்கும். இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட நடுநிலைப் போக்கில் எழுதப்படும் வாழ்க்கை வரலாறுகள்தான், நல்ல பதிவுகளாக அமையும்.

இந்தப் புத்தகம் அப்படிப்பட்டதுதான். நன்றாக எழுதியிருக்கிறார் காயத்ரி. ரஜினியின் வயதுக்கேற்ப அந்தஸ்து அதில் தரப்பட்டிருக்கிறது. உதாரணத்துக்கு அவரது சிறுவயது பருவ நிகழ்வுகளில் சிறுவன் ரஜினிதான். அதில் சிறப்பு மரியாதை கிடையாது. சூப்பர் ஸ்டாராக வந்த பிறகு அதற்குரிய மரியாதையோடு விளித்து எழுதியிருப்பது இந்த நூலுக்கு தனி நம்பகத் தன்மையைத் தருகிறது.

ரஜினியைப் பற்றி நிறைய சொல்லலாம். அவரை நான்கு முறை சிறப்பு நேர்காணல் செய்த பெருமை எனக்குண்டு. ஆனால் அதைப் பற்றி பேசும் மேடை இதுவல்ல.

தமிழ் சினிமாவில் தியாகராஜ பாகவதர் காலத்துப் பாடல்களை இன்றும் கூட கேட்டு ரசிக்கலாம். அதற்குப் பிறகு எம்ஜிஆர்தான் மிகச் சிறந்த பொழுதுபோக்குப் படங்களைத் தந்தார். இப்போது பார்த்தாலும் அவரது படங்கள் மிகச்சிறந்த பொழுதுபோக்காக அமைந்துள்ளன. அவருக்குப் பிறகு அந்த மேஜிக் கைவரப் பெற்றவர் சூப்பர் ஸ்டார் ரஜினிதான். மிகச் சிறந்த நடிகர் மட்டுமல்ல. அதையும் தாண்டிய பல பரிமாணங்கள் ரஜினி அவர்களுக்கு உண்டு.

வெளிநாடுகளிலும் ஒரு நடிகரைப் பற்றி பல புத்தகங்கள் வருகி்ன்றன. ஆனால் இங்கே அப்படி இல்லை. ரஜினியைப் பற்றி எப்போதோ இந்த மாதிரி புத்தகங்கள் வந்திருக்க வேண்டும். டாக்டர் காயத்ரி போன்றவர்கள் ரஜினியைப் பற்றி இன்னும் பல கோணங்களில் புத்தகங்கள் எழுதலாம். ஒரு ஞாயிற்றுக் கிழமையை இதற்காக ஒதுக்கி ரஜினியுடன் சில மணிநேரங்கள் உரையாடி, அதையே புத்தகமாகவும் கொண்டுவரலாம்.

அப்படிச் செய்யும்போது, ரஜினியைப் பற்றியும், அவரது எண்ணங்கள் பற்றியும், மக்களின் ரசனை குறித்தும் மக்களுக்குத் தெரியவரும், என்றார்.

- வினோஜாஸன்
http://www.envazhi.com

Thursday, November 27, 2008

ரஜினி பேரக் கேட்டாலே...

சூப்பர் ஸ்டார் ரஜினியின் வாழ்க்கை வரலாற்றை தி நேம் இஸ் ரஜினிகாந்த் என்ற பெயரில் டாக்டர் காயத்ரி சில மாதங்களுக்கு முன் ஆங்கிலத்தில் வெளியிட்டது நினைவிருக்கும்.
இதன் தமிழ்ப் பதிப்பு ரஜினி பேரைக் கேட்டாலே... எனும் தலைப்பில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 30) வெளியிடப்படுகிறது.

கனிமொழி எம்பி முதல் பிரதியை வெளியிட, சவேரா குரூப்ஸ் சேர்மன் நீனா ரெட்டி பெற்றுக் கொள்கிறார். (விழா நடக்குமிடம், மற்ற விவரங்கள் முழுமையாக அழைப்பிதழில்)
இந்த விழாவின் சிறப்பு, எழுத்தாளர் – கார்டூனிஸ்ட், எல்லாவற்றுக்கும் மேல் ரஜினியின் நலம் விரும்பிகளுள் ஒருவரான மதன் சிறப்பு விருந்தினராகக் கலந்து

கொள்கிறார்.

மற்றொரு சிறப்பு விருந்தினர் ரஜினி ரசிகர்கள் குடும்பத்தின் ஒரு உறுப்பினராகவே கருதப்படும் எஸ்பி முத்துராமன். விழாவை இறைவணக்கம் பாடித் துவக்கி வைப்பது யார் தெரியுமல்லவா... விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர்!

ஆங்கிலப் புத்தகத்தில் சில பிழைகள் இருந்தன. அவற்றை விழா நடந்து கொண்டிருக்கும்போதே, காயத்ரியின் பிஆர்ஓ நிகில் மூலம் முதல்முறையாக நாம்தான் சுட்டிக் காட்டினோம். பின்னர் ஏராளமான ரசிகர்களும் அதுகுறித்து கடிதங்களும் மின்னஞ்சல்களும் அனுப்பியிருந்தனர்.

அதனடிப்படையில் இப்போது பல்வேறு பிழைகள் திருத்தப்பட்டு, முழுமையான புத்தகமாக, தமிழில் சூப்பர் ஸ்டாரின் முதல் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் எனும் சிறப்போடு வெளிவருகிறது ரஜினி பேரக் கேட்டாலே...!

இந்த விழாவில் ரஜினிக்கு நெருக்கமான இன்னும் சில விவிஐபிக்களும் கடைசி நேரத்தில் பங்கேற்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது!
http://www.envazhi.com