Showing posts with label Dinakaran. Show all posts
Showing posts with label Dinakaran. Show all posts

Wednesday, September 10, 2008

இரு பொய்யர்களின் மோதல்!


தினமலரும் சன் டிவியும் ஆரம்பத்திலிருந்தே மோதி வருகின்றன. ஒருவர் அந்தரங்கத்தை (அசிங்கத்தை) மற்றவர் அம்பலப்படுத்தி, தமிழ் மக்களுக்கு தங்கள் சுய முகங்களை வெளிப்படுத்தி வருகின்றன.

ஒரே பொய்யை திரும்பத் திரும்பச் சொல்லி உண்மையாக்க முயல்வதில் இரு நிறுவனங்களுமே ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல.

குசேலன் நஷ்டம்... மாபெரும் நஷ்டம், மக்கள் பார்க்க வரவில்லை என எழுதியும் பேசியும், தியேட்டர்காரர்களைத் தூண்டிவிட்டும் தன் வயிற்றெரிச்சலைக் காட்டிக் கொண்டன சன்டிவியும் அதன் சகோதர பத்திரிகைகளும்.

ஆனால் இன்றைக்கு சன் டிவியில் காமெடி, சிறப்புக் காட்சிகள், பாடல்கள், டாப் டென் என சகலத்திலும் குசேலன்தான் முன்னிலையில் இருக்கிறது.

மக்கள் பார்க்காத படம் என்று பிரச்சாரம் செய்துவிட்டு, இன்று அதே படக்காட்சிகளை கசாப்புக் கடைக்காரன் மாதிரி கூறுபோட்டு விற்று காசு பார்த்துக் கொண்டிருக்கிறது சன் டிவி.
அதேபோல தினமலர் நிர்வாகிகள் மீது தனிப்பட்ட முறையில் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது சன் நிர்வாகம், தினகரன் நாளிதழை தங்கள் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவந்ததிலிருந்து. தினமலர் ரமேஷ் எந்த ஓட்டலில் தண்ணியடிக்கிறார் என்பதில் தொடங்கி, அவர் யார் யாரிடம் தவறாக நடந்து கொண்டார் என்பது வரை அந்தரங்கமான பல விஷயங்களை அம்பலப்படுத்தி வருகிறது சன்.

இதற்கு சாட்சிகளைத் தயார் செய்வதிலும் கில்லாடித்தனமாக செயல்படுகிறார்கள் சன் குழுமத்தினர்.

அதற்கு நிகராக, சன் நிர்வாகம் மற்றும் அதனைச் சார்ந்தவர்களின் ஊழல்களைப் பட்டியலிடுகிறது தினமலர்.

இப்படி பரஸ்பரம் குற்றச்சாட்டிக் கொண்டிருந்தாலும் இதுவரை ஒருவர் மீது ஒருவர் நேரடியாக போலீஸ் புகார் வரை போகாமலிருந்தனர்.

இதன் அடுத்த கட்டம், நபிகள் நாயகத்தை தினமலர் மோசமாகச் சித்தரித்து கேலிச் சித்திரம் வரைந்துவிட்டது என்ற பிரச்சாரத்தை சன் டிவி தொடங்கியது. ஒரு நாளைக்கு நூறு முறையாவது இந்தச் செய்தியை ஒளிபரப்பியபடி இருந்தனர் சன் தரப்பில்.
இது தினமலருக்கு எதிராக வட மாவட்ட முஸ்லிம்கள் போராட்டம் நடத்தும் அளவுக்குப் போய்விட்டது.

இப்போது, மதக் கலவரத்தைத் தூண்டும் விதத்தில் சன் டிவி செயல்பட்டு வருவதாக தினமலர் போலீஸில் புகார் கொடுத்துள்ளது.

சன் செய்தி ஆசிரியர் ராஜா, சன் நிர்வாக ஆசிரியர் முரசொலி செல்வம் ஆகியோரைக் கைது செய்து விசாரிக்கவும் முடிவு செய்து களமிறங்கியுள்ளது போலீஸ்.

முதல்வர் கலைஞருக்கும் தினமலர் ஆகாத பத்திரிகைதான் என்றாலும், இப்போதைக்கு எதிரிக்கு எதிரி நண்பன் என்ற கொள்கையின் அடிப்படையில், போலீஸின் இந்த நடவடிக்கைக்கு கலைஞர் ஆசி உண்டென்பது நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை!

இன்னும் சில தினங்களில் இது மிகப் பெரிய மீடியா யுத்தமாகவும் வெடிக்கக் கூடும்.

பத்திரிகை வாங்கமாலேயே நமக்கும் பொழுதுபோகும்!

தினமலர் கொடுத்த போலீஸ் புகார் குறித்த செய்தி:

வேலூர் தினமலர் பதிப்பில் நபிகள் நாயகம் குறித்த கார்ட்டூன் வெளியானது தொடர்பாக பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் செய்தி ஒளிபரப்பியதாக சன் டிவி மீது தினமலர் நாளிதழ் புகார் கொடுத்துள்ளது. இதுதொடர்பாக சன் டிவியின் நிர்வாக ஆசிரியர் முரசொலி செல்வத்தை போலீஸார் விசாரிக்கவுள்ளனர்.

தினமலர் நாளிதழின் (சென்னை எழும்பூர் அலுவலகம்) செய்தி ஆசிரியர் பார்த்திபன் சென்னை காவல்துறை ஆணையர் சேகரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அதில், வேலூர் தினமலர் பதிப்பில் நபிகள் நாயகம் பற்றிய கார்ட்டூன் படம் ஒன்று வெளியானது தொடர்பாக இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். பின்னர் இந்த பிரச்சினை சுமூகமாக பேசி முடிக்கப்பட்டது.


ஆனால் இது தொடர்பாக இரு பிரிவினருக்கு இடையே மோதலை உண்டாக்கும் வகையில், சன் டிவி செய்தி வெளியிட்டது. இது பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் செயல் ஆகும். இதுதொடர்பாக சன் டிவி மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் என்று பார்த்திபன் கூறியிருந்தார்.

இந்தப் புகார் மனு மீது அரசு வக்கீலின் ஆலோசனை பெற்று சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார், 153-ஏ, 505-2 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

முதலில் செய்தி ஆசிரியர் பார்த்திபனிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது சன் டிவி செய்தி ஆசிரியர் ராஜாதான் செய்திகளுக்கு முழுப் பொறுப்பு என்று பார்த்திபன் போலீஸாரிடம் தெரிவித்தார்.

இதையடுத்து ராஜாவுக்கு போலீஸார் விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி சம்மன் அனுப்பினர். ஆனால் ராஜா வரவில்லை.


இந்த நிலையில் சன் டிவி சார்பில் நேற்றுமத்திய குற்றப் பிரிவு போலீஸாரிடம் ஒரு கடிதம் தரப்பட்டது. அதில், செய்திகளுக்கு ராஜா பொறுப்பில்லை. நிர்வாக ஆசிரியர் முரசொலி செல்வம்தான் பொறுப்பு என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து முரசொலி செல்வத்திடம் போலீஸார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர் என்று தெரிகிறது.

முரசொலி செல்வம், மறைந்த முரசொலி மாறனின் தம்பி ஆவார். இவர் முதல்வர் கருணாநிதியின் மகள் செல்வியை மணந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


நன்றி: தட்ஸ்தமிழ்

Friday, September 5, 2008

இவை அமிலம் ஊற்றி அழிக்கப்பட வேண்டிய நச்சுக் காளான்கள்!


இன்று தமிழகத்தில் எரியும் பிரச்சினையாகப் பார்க்கப்படுவது திமுக, விஜயகாந்த், பாமகவினரின் அரசியல் அநாகரிகங்களோ அல்லது விலை உயர்வோ கிடையாது. சன்டிவியின் சுமங்கலி கேபிள் விஷனுக்கு மதுரையில் ஏற்பட்டுள்ள தலை போகிற பிரச்சினைதான்.

சன் நெட்வொர்க் சேனல்களை ஒழித்துக் கட்ட அழகிரி துவங்கியிருக்கும் ராயல் கேபிள் விஷனுக்கு ஆரம்பத்திலிருந்தே தனது சேனல்களைக் கொடுக்க மறுத்து வருகிறது சன் நெட்வொர்க். ட்ராய், கோர்ட் என பல முனைத் தாக்குதலர்களை நடத்தியும்கூட அழகிரியின் ஆர்சிவிக்கு இன்னும் சன் குழும சேனல்கள் கிடைத்தபடில்லை.

இன்னொரு பக்கம் அரசே கேபிள் கழகத்தைத் தொடங்கியுள்ளது. இதே கழகத்தை முன்பு முதல்வராக இருந்த ஜெயலலிதா துவங்குவதாக அறிவித்தபோது, ஓடோடிப்போய் கவர்னரிடம் சொல்லித் தடுத்து நிறுத்திய அதே கருணாநிதி, யாருக்காக முன்பு இந்த திருப்பணியைச் செய்தாரோ அந்த சன்’னுக்கு எதிராகத் துவங்கியுள்ளார்.

காலம்தான் எத்தனை அற்புதமான விமர்சகன் பாருங்கள்...!

தான் சொன்னது நிறைவேறாவிட்டால் சாம தான பேத தண்டம் என சகலத்தையும் உபயோகித்துப் பார்ப்பதில் வல்லவர் அழகிரி. இப்போது தண்டத்தைக் கையிலெடுத்திருக்கிறார் போலும்.

சன்னும் தினகரனும் தினந்தோறும் குய்யோ முறையோ என கூப்பாடு போடுகின்றன. தினசரி யாராவது ஒரு தலைவரைப் பார்த்து மனு கொடுத்து அழகிரிக்கு எதிராக அறிக்கை விட வைக்கிறார்கள்.

அவர்களின் பித்தம் எந்தளவுக்குப் போய்விட்டது பாருங்கள்... இரு தினங்களுக்கு முன் சரத்குமார் (பெரிய கட்சித் தலைவராம்!), விஜய்காந்திடமெல்லாம் மனு கொடுத்து அழகிரியின் அராஜகத்தைத் தட்டிக் கேளுங்கள் என கெஞ்சினார்கள். இதை தலைப்புச் செய்தியாக வேறு போட்டுக் கொண்டார்கள். தொடர்ந்து ஒரு வாரமாக சன்னுக்கும் அழகிரிக்குமான மோதல்கள்தான் சிறப்புப் பார்வையாக, செய்தியாக ஒளிபரப்பாகின்றன.

தினகரன், தமிழ் முரசுகளைத் திறந்தால் போதும், பிரதாப முதலியார் சரித்திரத்தை மிஞ்சும் வகையில் சன் –ஆர்சிவி யுத்தக் கதைகள்தான் ஆக்கிரமித்துள்ளன.
செய்தி ஊடகம் என்ற அருமையான விஷயத்தை முறையாகப் பயன்படுத்த வக்கின்றி, இந்த சுயநலப் பெருச்சாளிகள் எப்படியெல்லாம் வக்கிரத்தை பிளேக் போல பரப்பி வருகின்றன பார்த்தீர்களா...

இந்திய பத்திரிகை கவுன்சில் என்ன செய்து கொண்டிருக்கிறது... இந்த மாதிரி கேவலத்தைத் தட்டிக் கேட்க வக்கில்லாத இந்த அமைப்புக்கு சட்டப் பூர்வ அங்கீகாரம் எதற்கு? இதன் தலைவராக சுப்ரீம் கோர்ட் நீதிபதி வேறு!

ஆனால் நம்ம மறத்(துப்போன) தமிழர்களுக்கு சூடு சுரணையே கிடையாது... ரெண்டு ரூபாய்க்குக் கொடுத்தால் எலிப் பாஷாணத்தேயே வாங்கி காப்பி போட்டுக் குடிப்பார்கள் போலும்...

சன் நென்வொர்க் எதற்காக மீடியா உலகை கையகப்படுத்தியது?

வெறும் வருமானத்துக்காக மட்டுமில்லை. இதுவும் ஒருவித ஆட்சிமுறைதான். இங்கே தேர்தல் கிடையாது. ஆனால் எப்போதும் கையில் அதிகாரமிருக்கும். உங்கள் உள்ளூரில் சும்மா 500 பிரதிகளை ஓட்டிக் கொண்டிருக்கும் ஏதாவது ஒரு சின்ன பத்திரிகை முதலாளியின் ஆட்டங்களையே உங்களால் தாங்க முடியாது.

அப்படி இருக்கையில் 10 லட்சம் பிரதிகளை விற்பதாக தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் ஒரு பத்திரிகையும் அதன் முதலாளிகளும் நினைத்தால், (அதுவும் நாளிதழ்) என்னென்ன அக்கிரமங்களை செய்தி என்ற பெயரில் அரங்கேற்ற முடியும் என்பதைக் கொஞ்சம் கற்பனை செய்துப் பாருங்கள். அதற்கு அவசியம் கூட இல்லை... தொடர்ந்து ஒரு வாரம் தினமலர், தினகரன் படித்துப் பாருங்கள்...

இந்த லட்சணத்தில் மும்பை, புனே வரை போய் தமிழ்நாட்டு மானத்தை கப்பலேற்றப் போகிறது இந்த மூன்றாம் தரப் பத்திரிகை!

ஒரு தீவிரவாதியைக் கூட மிகச் சுலபமாக காப்பாற்றிவிட முடியும், தினகரன், சன் டிவி போன்ற ஊடக ஆதரவு இருந்தால்...

தான் நல்லதென்று நம்பும் அல்லது தனக்கு ஆதாயம் தரும் எந்த ஒரு மோசமான விஷயத்தையும் பத்திரிகை எனும் ஆயுதம் மூலம் மக்கள் மீது திணிப்பது தினகரன், தினமலர் போன்ற பத்திரைகளுக்கு மிகச் சுலபம், அது அவர்களுக்குக் கைவந்த கலை. தினத்தந்தியும் இவர்களுக்கு சளைக்காத பத்திரிகைதான். உதாரணம் சிவந்தி – ராமச்சந்திர ஆதித்தன்களின் தொடர் மோதல்கள் செய்தியாக வெளிவரும் விதம்!

மக்கள் சிந்திக்க வேண்டும்... செய்தியைத் தெரிந்து கொள்ள எது நடுநிலைப் பத்திரிகை என்பது தெரிந்து அவற்றுக்கு மட்டுமே ஆதரவளிப்பதுதான் இது போன்ற நச்சுக் காளான்களை ஆசிட் ஊற்றி அடியோடு அழிக்க உதவும்.

சிகரெட் பிடிங்க.... தண்ணி அடிங்க... அது கூடத் தப்பில்ல... ஆனா தினகரன் படிப்பதும், சன் டிவி பார்ப்பதும் முன்பு சொன்ன இரண்டு தீய பழக்கங்களை விடவும் கொடிய பழக்கம் (அதற்காக தண்ணியடிக்கச் சொல்லவில்லை. இது ஒரு ஒப்புமைக்காக!).