Showing posts with label ரஜனி. Show all posts
Showing posts with label ரஜனி. Show all posts

Tuesday, September 2, 2008

ரஜினியின் ராஜ்யம்!


ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா... ஏன் வருவதுப்போல போக்குக் காட்டிவிட்டு பின்னர் வர மறுக்கிறார்?

இதுதான் இன்றைக்கு பெரும்பாலான நடுநிலையாளர்கள்... ஏன் ரசிகர்களின் மனதில் எழுந்துள்ள கேள்வி.

இதைத் தவறு என்றும் ஒரேயடியாகக் கூறுவதற்கில்லை.

உண்மையில் ரஜினிக்கு அரசியல் ஆர்வமில்லையா...

‘ஏன் இல்லாமல்... நிறையவே உண்டு. ஆனால் ரஜினி செய்ய நினைக்கிற அரசியல் வேறு, நிச்சயம் அந்த மாதிரி உயர்ந்த அரசியலுக்கு இன்றைய தமிழ்நாடு இடம் கொடுக்குமா? என்பதுதான் சந்தேகம்...’ என்கிறார் ரஜினியின் நெருங்கிய மிகச் சில நண்பர்களில் ஒருவரும் மூத்த பத்திரிகையாளருமான சோ எஸ். ராமசாமி

சோ மட்டுமல்ல... ரஜினியே பல முறை திரைப் படங்களிலும், பொது மேடைகளிலும் இதைப் பேசியிருக்கிறார், இன்னும் நயமான வார்த்தைகளில்.

‘என் ஒருவனால் மட்டுமே எந்த மாற்றங்களையும் இந்த சமூகத்தில் செய்துவிட முடியாது. இங்கே எல்லாமே தவறாக இருக்கிறது. இந்த சமூகமே அடிப்படையில் மாற வேண்டும், ஒட்டுமொத்த அமைப்பே மாற வேண்டும். அப்போதுதான் நான் நினைக்கிற மாதிரி ஒரு ஆட்சியைத் தர முடியும்... அது வரை இப்படித்தான் இருக்கும்...’ - ரஜினி அரசியலுக்கு வருவது நிச்சயம் என அனைவரும் கணிப்பு வெளியிட்டுக் கொண்டிருந்த நேரத்தில் ரஜினி எழுதிய வசனம் இது, வள்ளி படத்தில் (கதை, திரைக்கதை, வசனம் – நம்ம சூப்பர் ஸ்டார்தான்!).

ரஜினி அரசியலுக்கு வரத் தயங்குவதன் காரணம் அன்றைக்கும் சரி இன்றைக்கும் சரி, அரசியலும், சட்ட அமைப்பும் நல்ல அரசாங்கம் அமைவதற்கு ஏதுவாக இல்லை என்பதுதான்.

1996-ம் ஆண்டு ரஜினி தூர்தர்ஷனுக்கு அளித்த பேட்டியிலும் இதையே தெளிவாகக் கூறியிருப்பார். அவரது இந்தக் கருத்து உறுதிப்பட்டது மறைந்த பிரதமர் பி.வி.நரசிம்மராவுடனான சந்திப்புக்குப் பிறகுதான்.

எந்த அரசியல்வாதியையும் தோற்றத்தையும், கேள்விப்பட்ட விஷயங்களையும் மட்டுமே வைத்து எடைப் போட்டுவிடக் கூடாது என்பதை ரஜினி உணரத் தொடங்கியதும் இந்த சந்திப்புக்குப் பிறகுதான்.

முதல்வர் ரஜினி!

ஆரம்பத்தில் நரசிம்மராவ் மீது பெரும் மதிப்பு வைத்திருந்தார் ரஜினி. அவரது பன்மொழிப் புலமை, முடிவெடுப்பதில் காட்டும் நிதானம், நல்ல மாற்றத்தை தமிழக அரசியலில் கொண்டுவர வேண்டும் என்ற கருத்துக்களுக்கு ராவ் அளித்த முக்கியத்துவம் போன்றவை ரஜினிக்கு பெரும் நம்பிக்கையைத் தந்தன.

அதே சூட்டோடு நரசிம்மராவைச் சந்தித்த ரஜினி, தன் விருப்பத்தைக் கூற, அமைதியாக அனைத்துக்கும் தலையசைத்தார் ராவ். ஆனால் ரஜினி நேரடியாக களத்தில் இறங்கி, தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல்வர் பதவியில் அமர வேண்டும். ஆனால் அது முழுக்க முழுக்க காங்கிரஸ் அரசாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் ராவ். இந்த விஷயத்தில் யாரும் நரசிம்மராவைக் குறைசொல்ல முடியாது.

ஆனால் ரஜினிக்கு இதில் உடன்பாடில்லை. ஒரு காங்கிரஸ் முதல்வராக, டெல்லியின் ஏஜென்டாக இருப்பதில் அவருக்கு நிச்சயம் மகிழ்ச்சியிருக்காது என்பது புரிந்து கொள்ளக் கூடியதே. எனவே மூப்பனார் முதல்வராக இருக்கட்டும், ஆனால் அதற்கான அனைத்து முயற்சிகளுக்கும் – தேர்தல் பிரச்சாரம் உள்பட- தானே முன்னிற்பதாக உறுதியளித்தார் ரஜினி.

ராவும் கிட்டத்தட்ட ஒப்புக் கொண்டார்.

அடுத்து தான் விரும்பியது போன்ற ஒரு அரசுதான் தமிழகத்தில் ஏற்படப் போகிறது என்ற நம்பிக்கையோடு சென்னையில் ரஜினி கால் வைக்கும்போது, அதிரடியாக வந்தது காங்கிரஸ் – ஜெயலலிதா கூட்டணிச் செய்தி.

அதன்பிறகு ரஜினி தயவில் தமாகா பிறந்ததும், அதற்கு தலைமையேற்குமாறு ஒரு பிரஸ் மீட்டில் மூப்பனாரே வேண்டுகோள் விடுத்து, அதை ரஜினி நிராகரித்ததும் நடந்தது.
ரஜினி தயவுடன் முதல்ரான கருணாநிதி, நன்றி அறிவிப்புக் கூட்டத்தில் நெப்போலியன், தியாகு, குப்பன், சுப்பன் எல்லாருக்கும் நன்றி தெரிவித்துவிட்டு, கடைசியாக போனால் போகிறதென்று ரஜினி பெயரைச் சொல்லி தனது தன்னம்பிக்கையின்மையைப் பறைசாற்றியதும் நினைவிருக்கும்.

இதன் பிறகு கிட்டத்தட்ட அரசியலே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்ட ரஜினி, மீண்டும் 2002-ல் அரசியலே களத்தைத் தீண்டிப் பார்க்க அது நல்லவர் யார் கெட்டவர் யார் என்பதையெல்லாம் பார்க்காமல் ரஜினியைச் சுட்டுவிட்டது. சூழ்நிலை அப்படி.

தனது பழைய கொள்கையே சிறந்தது என்ற நினைப்பில் மீண்டும் முழு நேர சினிமாக்காரராகி விட்டார் ரஜினி.

என்னுடையது தனி சாம்ராஜ்யம்...

ரஜினியின் படங்களைக் கூர்ந்து கவனிப்பவர்களுக்கு ரஜினியின் மனநிலை தெளிவாகப் புரியும்.
எந்தப் படத்திலும் ரஜினி அரசாங்கத்தைச் சார்ந்து இயங்கமாட்டார். அரசாங்கம் அது பாட்டுக்கு நடக்கும். ஆனால் ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய மக்கள் நலப் பணிகளை ரஜினி தனி மனிதராக தன் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் செய்வார். ஒரு இணை அரசாங்கமே நடத்துவார். மனிதாபிமானம் எனும் சட்டம்தான் அவரது ராஜ்ஜியத்தில் அதிக வலுவானதாகத் திகழும்.


எஜமான், பாட்ஷா, முத்து, அருணாச்சலம், படையப்பா, பாபா, சிவாஜி... இப்படி எல்லாப் படங்களிலும் இந்த சிறப்பம்சத்தைக் காணலாம்.

அப்படியென்றால் ரஜினிக்கு அரசியல் சாசன மக்களாட்சி முறை மீது நம்பிக்கையில்லையா... என்ற விமர்சனம் எழக் கூடும்.

ரஜினி நம்புவது மனசாட்சியையும், கடவுளையும் மட்டுமே. சட்டமும் போலீசும் இரண்டாம் பட்சம்தான் அவருக்கு.

ஒரு நல்ல மனிதனிடம், மக்கள் நலமே பெரிதாக எண்ணும் ஒருவனிடம் சர்வாதிகாரத்தைத் தரலாம். அது நிஜமான நல்லாட்சியைத் தர, மக்களுக்கு அவன் செய்ய நினைக்கும் நல்லவற்றை தடையின்றி செய்ய வைக்க உதவும், ஃபிடல் காஸ்ட்ரோவைப் போல.

இதுதான் ரஜினியின் மனம் விரும்பும் அடிப்படை மாற்றம். குறைந்தபட்சம் இதற்கான அதிகாரம் கொண்ட ஒரு ஆட்சியாளராக இருந்தால்தான், தான் வகிக்கும் பதவிக்குரிய பல நல்ல காரியங்களை மக்களுக்குச் செய்ய முடியும் என்பது அவர் எண்ணம்.

ஆனால் இன்றைக்கு அதற்கான வாய்ப்பு இருக்கிறதா... பதில் உங்களுக்கே தெரியும்!