
கலைஞர் இனி ராஜபக்சேவின் ராஜதந்திரம், பெருந்தன்மை குறித்தும் பேசலாம்!
உடன்பிறப்பே, நான் திமுக தலைவர் பதவியை ராஜினாமா செய்வதற்காக, நீங்கள் யாரும் உணர்ச்சிவசப்பட்டு தீக்குளிக்க வேண்டாம்… என்று அவர் சொல்லி முடித்த மறுநாள் காலை நான்கைந்து பேர் உயிருடன் கொளுத்திக் கொண்டதாக செய்தி வந்தது, முன்பொருமுறை.
ஒரு விஷயத்தை ‘செய்யாதீர்கள்…அரசியலாக்காதீர்கள்’ என கலைஞர் மு. கருணாநிதி குறிப்பிட்டுச் சொல்கிறார் என்றால், அந்த விஷயத்தை அவர் தீவிரமாகச் செய்யப்போகிறார் என்று அர்த்தம்.
ஈழத் தமிழர் விஷயத்திலும் இப்போது இதே பாணி அரசியலை கலைஞர் கையிலெடுத்திருக்கிறார். ‘முத்துக்குமார் தீக்குளித்த சம்பவத்தை அரசியலாக்காதீர்கள்… இம்மாதிரி தீக்குளிப்புகளை ஊக்கப்படுத்தாதீர்கள்’ என இந்தப் பக்கம் அறிக்கை விட்டுவிட்டு, இன்னொரு பக்கம், அதை தீவிர அரசியலாக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளார். முத்துக்குமார் தீக்குளிப்பால் தமிழர்கள் மத்தியில் ஏற்பட்டுவிட்ட உணர்ச்சிப்பூர்வ போராட்ட நிலையை அடக்க முயலும் அரசியல் இது.
ஈழப் பிரச்சினையில் கலைஞர் அரசின் கையாலாகாத நிலையைக் கடுமையாகவே விமர்சித்திருந்த முத்துக்குமார், தன் மரணத்தை துருப்புச் சீட்டாக வைத்து போராடி ஈழப் பிரச்சினைக்குத் தீர்வு காணுங்கள் என தனது வாக்குமூலமாக அளித்த துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிட்டிருந்தார். இதனால் முத்துக்குமாரின் உடலுக்கு மரியாதை செலுத்த வந்த திமுக எம்எல்ஏ பாபுவை துரத்தியடித்தனர் மாணவர்கள். இன்னொரு பக்கம் அரசு அறிவித்த நிதியையும் முத்துக்குமார் குடும்பம் பெற்றுக் கொள்ள மறுத்துவிட்டது.
இதில் கடுப்பாகிவிட்ட கலைஞர், எங்கே முத்துக்குமாரின் மரணத்தை வைத்து, தமிழகத்தின் பிரதிநிதிகளாக வைகோ, ராமதாஸ் உள்ளிட்டவர்கள் தங்களைக் காட்டிக் கொள்வார்களோ என்ற பயத்தில், முத்துக்குமார் மறைவை அரசியலாக்காதீர்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதுவே முத்துக்குமாரின் தீக்குளிப்பு திமுகவுக்கு அனுசரணையாக இருந்திருந்தால், கலைஞரின் அறிக்கை எப்படியெல்லாம் வர்ணம் பூசி வந்திருக்கும் என யோசித்துப் பாருங்கள்.
செத்தவன் வீட்டில் அரசியல் செய்வதுதான் திராவிட அரசியலின் ஆரம்பமே. மொழிப்போர் தியாகிகள் என ஆரம்பித்து இப்போது ஈழப் போர் தியாகியாகிவிட்ட முத்துக்குமார் மரணம் வரை, அரசியலுக்கான முதல் விதையை ஊன்றுவதே திமுக அல்லது அதன் சார்பு அமைப்புகளாகத்தான் இருந்து வந்துள்ளன.
இப்போது தமிழகத்தில் தன்னெழுச்சியாக பரவியிருக்கும் ஈழ ஆதரவு நிலைப்பாட்டை தலைமையேற்று நடத்தியிருக்க வேண்டியதே கலைஞர்தான்.
இப்போது அவர் சார்ந்த ஊடகங்கள் திடீரென புலியெதிர்ப்புப் பிரச்சாரத்துக்கு மாறிவிட்டன. இதுவரை புலிகளின் அறிக்கைக்கு முக்கியத்துவம் தந்து வந்தவர்களுக்கு, இப்போது ராஜபக்சே பிரதர்ஸ் தருவதே அதிகாரப்பூர்வ செய்திகிவிட்டது. கலைஞரும் அவரைச் சார்ந்த ஊடகங்களும் இனி ராஜபக்சேவின் ராஜதந்திரம், பெருந்தன்மை குறித்தும் பேசலாம்!
உண்ணாவிரதம், கடையடைப்பு, பந்த் போன்றவற்றுக்கு எப்போதுமே வக்காலத்து வாங்கும் கலைஞருக்கு, அதையே மற்ற தலைவர்கள் செய்யும்போது கோபம் பொத்துக் கொண்டு வருகிறது. இன்று சட்டத்தின் ஏகபோகக் காவலராகிவிட்டார், ஒரு காலத்தில் அரசியல் சட்ட நகலெரித்த இந்த பகுத்தறிவுவாதி.
சேது சமுத்திரத்துக்காக இவர் அறிவித்த வேலை நிறுத்தம், உருக்கமான அறிக்கைகளையெல்லாம் அத்தனை சுலபத்தில் மறந்துவிட்டாரே மனிதர்!
சோனியா காந்தியின் புலிகள் பழிவாங்கும் படத்துக்கு ஆதரவாகவும், காங்கிரஸ் கூட்டணியை விட்டுவிட்டால் அரசியலில் தனது வாரிசுகளுக்கு எதிர்காலமே இல்லாமல் போய்விடுமோ என்ற நம்பிக்கையின்மையும்தான் இன்று கலைஞரை மாறி மாறி குட்டிக்கரணமடிக்க வைத்துள்ளன.
தமிழினத் தலைவராக இவரை உருவகப்படுத்திக் கொண்டாடிக் கொண்டிருந்த தமிழர்கள் நிஜமாகவே பரிதாபத்துக்குரியவர்களே!
-எஸ்எஸ்
http:/www.envazhi.com