
இந்த நடிகர் இத்தனை தேசிய விருது வாங்கியிருக்கிறார்... ரஜினி ஒருமுறையாவது வாங்கியிருக்கிறாரா... எத்தனை சர்வதேச பட விழாக்களில் அவர் கலந்து கொண்டிருக்கிறார்? என்றெல்லாம் கமெண்ட் என்ற பெயரில் சிலர் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுக்கு பதில் சொல்லக் கூடாது என்றுதான் முதலில் நினைத்திருந்தேன்.
அட... பூக்கடைக்கு விளம்பரமும், நியான் விளக்கும் போட்டுக் கொள்ளும் இந்தக் காலத்தில், எடுத்துச் சொன்னால்தான் புரியும் பலருக்கு. நாம் முந்தைய பதிவில் பார்த்த மாதிரி பலருக்கு புத்தக வாசிப்பு என்பதே அறவே இல்லாமல் போய்விட்டது.
கம்ப்யூட்டரும் கையுமாக இருக்கும் இவர்களுக்கு தினத்தந்தி படித்து முடிப்பதற்குள் நூறு முறையாவது சலிப்புத் தட்டிவிடுகிறது. எனவே இவர்களுக்கு பழைய சம்பவங்கள் நினைவிலிருக்க நியாயமில்லை.
முள்ளும் மலரும், ஜானி, ஆறிலிருந்து அறுபது வரை, எங்கேயோ கேட்ட குரல்... இப்படி ரஜினியின் கிளாஸிகல் பிளாக் பஸ்டரைக் கூட விட்டுவிடுங்கள்...
சமீபத்திய படங்களையே பார்ப்போம்...
அண்ணாமலை...
இந்தப் படத்தை மிகவும் விரும்பிப் பார்த்த ஒரு முக்கியப் பிரமுகர் யார் தெரியுமா... தேசத்தின் தலைமைக் குடிமகன் என்ற பொறுப்பிலிருந்து சங்கர் தயாள் சர்மா.
அண்ணாமலை ரிலீசான கையோடு புதுடெல்லியில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் அதைத் திரையிட்டுக் காட்ட ஏற்பாடு செய்திருந்தனர். சிறந்த ஜனரஞ்சகப் படம் எனும் பிரிவில் அண்ணாமலை இடம் பெற்றிருந்தது. அன்றைக்குப் பிரதமராக இருந்தவர் நரசிம்மராவ்.
முதலில் இந்தப் படம் ஜனாதிபதிக்கு திரையிட்டுக் காட்டப்பட்டது. படம் முடிந்ததும் இந்த நடிகரை நான் நிச்சயம் பார்க்க வேண்டும் என தன் விருப்பத்தைச் சொன்னார். அதன் பிறகு நரசிம்மராவுக்குத் திரையிட்டுக் காட்டப்பட்டது.

இதில் விசேஷம் என்ன தெரியுமா... அந்த திரைப்பட விழாவில் ஜனாதிபதியும் பிரதமரும் விரும்பிப் பார்த்த படங்கள் இரண்டு மட்டுமே. ஒன்று அமிதாப் நடித்தது. அடுத்தது ரஜினி நடித்த அண்ணாமலை.
அதன் பிறகு சில ஆண்டுகளுக்குப் பின் சங்கர் தயாள் சர்மா, நரசிம்மராவ் இருவரையுமே ரஜினி சந்தித்துப் பேசிய போதும், அவர்கள் ரஜினியின் அண்ணாமலையை மறக்காமல் குறிப்பிட்டுள்ளனர் (ஆதாரம் ஜூனியர் விகடன் – இவர்களுக்கு வேறு என்ன வேலை அப்போது...!)
முத்து படத்துக்குக் கிடைத்த புகழும், பெருமையும் யாருக்கும் தெரியாததல்ல.
அதன்பிறகு தொடர்ந்து நான்கு முறை மாநில அரசின் சிறந்த நடிகர் விருதைப் பெற்றுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினி (முத்து அருணாச்சலம், படையப்பா, சந்திரமுகி).
எத்தனையோ சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு வருந்தி வருந்தி அழைத்தாலும் போக மறுத்துவிடுவது ரஜினியின் வழக்கம்.
கடந்த ஆண்டு லண்டனில் ஐஐஎப்ஏ (இந்திய ஆஸ்கார் என புகழப்படுவது) விருதுகள் வழங்கும் நடந்தது. இதில் ரஜினிக்கு, இந்திய திரையுலகின் சிறந்த சாதனையாளருக்கான விருது வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த அமைப்பின் தலைவரான அமிதாப் பச்சனே நேரடியாகக் கூப்பிட்டும் கூட, அந்த விழாவுக்குப் போக மறுத்துவிட்டார் ரஜினி.
அந்த விருதையாவது யார் மூலமாவது பெற்றுக் கொள்ளுங்கள் என அமிதாப் சொன்னதற்கு மிகுந்த பணிவோடு அதை மறுத்து, இன்னும் சாதிக்கத் துடிக்கிற இளைஞர்களுக்கு இந்த விருதைக் கொடுங்கள்... அடுத்த முறை வர முயற்சிக்கிறேன் என்று சொன்னவர் ரஜினி.
அவ்வளவு ஏன், இந்த ஆண்டு கோவாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவுக்கு தலைமையேற்றுத் துவக்கி வைக்க தென்னிந்திய திரையுலகமே ரஜினியின் பெயரைத்தான் முன் மொழிந்த்து.
விழா ஏற்பாட்டாளர்களும் ரஜினியை அழைக்க, அவர் இப்படியொரு கவுரவமே தனக்கு வேண்டாம். வேறு எந்த நடிகர் அல்லது நடிகைக்கு இந்த கவுரவத்தைக் கொடுங்கள் என கேட்டுக் கொண்டது உலகுக்கே தெரியுமே!
என்டிடிவி சார்பில் பிரதமர் மன்மோகன் சிங் வழங்கிய 'நாட்டின் சிறந்த எண்டர்டெய்னர்' விருதினைக்கூட, மிகுந்த வற்புறுத்தலுக்குப் பிறகே ரஜினி பெற்றுக் கொண்டார்.
விருதுகளும், கவுரவமும் தேடி வந்தாலும் அதை ஒரு பொருட்டாக மதிக்காமல் தன் வழியே செல்பவர் ரஜினி என்பதற்காகவே இதை எழுதுகிறேன்.
அதுமட்டுமல்ல... தேசிய விருது பெற என்னென்ன லாபிகள் செய்ய வேண்டும் என, விருதுக் குழுவில் இடம்பெற்றிருந்த இயக்குநர் கே.பாலச்சந்தரே பலமுறை கூறியிருக்கிறார்.
உலகம் போற்றிய ஒப்பற்ற நடிகர் சிவாஜிக்கே சிறந்த துணை நடிகர் விருதுதான் கொடுத்தார்கள். விமர்சனங்களுக்குப் பயந்து கடைசியில்தான் பால்கே விருது அறிவித்தார்கள்.
தமிழ்த் திரையுலகின் முடிசூடா மன்னன் எம்ஜிஆருக்கு பாரத் விருது கொடுக்க எவ்வளவு தாமதித்தார்கள் என்பதை உலகம் அறியும்.
எம்ஜிஆருக்குக் கிடைத்தது போலவே மாலையும் மரியாதையும் தானாகவே தேடிவரும் இந்த பாபாவுக்கும்!



