மக்கள் ஆதரவு எமது போராட்டத்தை உயிர்ப்புடன் வைக்கும்! - நடேசன்
கிளிநொச்சியில் ராணுவம் நுழைந்தது எமக்குப் பெரிய பின்னடைவல்ல. தமிழீழ மக்கள் மற்றும் உலகெங்கிலும் பரந்து விரிந்துள்ள தமிழ்ச் சமூகத்தின் ஆதரவு, எமது போராட்டத்துக்கு எதிரான நிகழ்கால மற்றும் எதிர்கால சவால்களை முறியடிக்கும்’, என்று கூறியுள்ளார் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் பா.நடேசன்.
கிளிநொச்சியில் ராணுவம் நுழைந்த பிறகு, புலிகளின் தலைவர் ஒருவர் பேட்டி தந்திருப்பது இதுவே முதல்முறை. மேலும் இப்போதைய கள நிலவரம், புலிகள் மீது சிலர் வைக்கிற விமர்சனங்கள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கும் அவரது நேர்காணலில் தக்க பதில்கள் உள்ளன.
விடுதலைப் புலிகள் ஆதரவு இணையதளமான ‘தமிழ்நெட்’டுக்கு அவர் திங்கள்கிழமை அளித்துள்ள சிறப்புப் பேட்டியின் தமிழாக்கம் இது:
கிளிநொச்சியின் வீழ்ச்சி, இலங்கை ராணுவத்துக்குக் கிடைத்துள்ள மதிப்பு மிக்க வெற்றி என ராஜபக்சே கூறியுள்ளாரே…
கிளிநொச்சியை இலங்கை ராணுவம் கைப்பற்றுவது இது முபதல்முறையல்ல. அதேபோல விடுதலைப் புலிகளும் ராணுவத்தை விரட்டிவிட்டு கிளிநொச்சியை திரும்பக் கைப்பற்றியுள்ளனர். கிளிநொச்சியில்தான் இலங்கை ராணுவம் சரித்திரப் பிரசித்தி பெற்ற படுதோல்விகளைச் சந்தித்துள்ளது.
எதிர்கால சமாதானப் பேச்சுக்களில் விடுதலைப் புலிகளை தனிமைப்படுத்தும் நோக்கில், இலங்கை அரசு கிழக்கில் தேர்தல் நடத்தி தங்கள் ‘பிரதிநிதி’களை அமர வைத்தது போல வடக்கிலும் நடத்த முயற்சிக்கிறது. இதனை இலங்கைக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள சிலர் ஆதரித்து வருகின்றனர். இது பற்றி…
ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு பகுதியில் ராணுவத்தின் துணையோடு சில பொம்மைகளை அமர வைக்கப் பார்க்கிறார்கள். மக்களின் உண்மையான பிரதிநிதிகளான புலிகளை ஓரம்கட்ட நடக்கும் முயற்சி இது. 1977-லிலேயே தங்கள் அரசியல் விருப்பம் என்ன என்பது குறித்து தமிழ் மக்கள் தெளிவான தீர்ப்பை அளித்துவிட்டார்கள்.
அப்போதிலிருந்து தமிழர்களின் உண்மையான பிரதிநிதிகள் நாங்களே என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் உரிமைப் போரினை முன்னெடுத்துச் சென்று வருகிறோம்.
அடிமைப்பட்டுக் கிடக்கும் ஒரு தேசத்து மக்களின் பிரதிநிதிகளாக, உண்மையான ஈடுபாடும் தியாக உணர்வும் கொண்டவர்கள் மட்டுமே வர முடியும்.
எமது மக்களும், உலகமெங்கிலும் வாழும் தமிழ்ச் சமுதாயமும் எமக்குப் பின்னால் நிற்கின்றனர். பொம்மை அரசுகளையும, பொம்மை நிர்வாகிகளையும் அமர்த்துவோருக்கு நாங்கள் தெரிவிக்கும் செய்தி இதுவே.
போர் நிறுத்தத்துக்கு புலிகள் தயார் என அறிவித்துள்ளீர்கள். ஆனால் புலிகளின் வசமிருந்த பெரும்பான்மை தமிழ் நிலப்பரப்பை ராணுவம் ஆக்கிரமித்துள்ளது இப்போது. மேலும் புலிகளை தனிமைப்படுத்த வேண்டும் என்பதற்காகவே, சில தமிழ் தலைவர்கள், குழுக்கள் கொழும்புவை ஆதரிக்கவும் தொடங்கியுள்ளனர். இது அபாயமான நிலைதானே?
இதைவிட மோசமான எத்தனையோ நெருக்கடிகளை எமது இயக்கம் வெற்றிகரமாக கடந்து வந்திருக்கிறது.
இம்மாதிரி நேரங்களில் மக்களின் பேராதரவுதான் எம்மைக் காத்து நின்றுள்ளது. இந்த தருணத்தில் அவர்களுக்கு எமது வணக்கத்தைச் செலுத்துகிறேன். இப்போதுள்ள நெருக்கடியையும் மக்கள் துணையோடு எமது இயக்கத்தினர் தகர்த்தெறிவார்கள்.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேல் இந்தப் போரை முன்னெடுத்துச் செல்லும் இயக்கம் எம்முடையது. எங்களுக்கு எந்த நாட்டின் படைபலமும் இல்லை. யாருடைய ஆதரவும் இல்லை. எமக்குப் பின்னால் நிற்பது மக்கள் மட்டுமே. இல்லையேல் ஒன்றும் செய்ய முடியாது. இதே ஆதரவின் பலத்தில் நாங்கள் இப்போதும் வென்று வருவோம்.
தமிழர்கள் பகுதிகளில் அப்பாவி மக்கள் மீது பலத்த வான் தாக்குதலை நடத்தி வருகிறது ராணுவம். இதில் ஏராளமான மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்தத் தாக்குதல்களிலிருந்து மக்களைக் காக்க நீங்கள் என்ன வியூகம் வைத்திருக்கிறீர்கள்?
ஒரு கொடுமையான இனப்படுகொலையை தனது ராணுவத்தை வைத்து நடத்தி வருகிறது இலங்கை அரசு. இதிலிருந்து தற்காத்துக் கொள்ளும் உத்திகளை மக்களுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறோம். இப்போது இலங்கை ராணுவம் நடத்தும் கொடிய இனப் படுகொலையின் போதும்கூட தங்கள் உறுதியையும் ஆதரவையும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.
வன்னியின் அனைத்து வழிகளும் அடைபட்டுள்ள நிலையில் உங்கள் தரப்பிலுள்ள மக்கள், ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்குச் செல்ல முயல்வதாகவும், புலிகள் அவர்களைக் கட்டுப்படுத்தி வைத்திருப்பதாகவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு மற்றும் அம்னெஸ்டி அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. உங்கள் கருத்து?
இந்த மாதிரி சர்வதேச அமைப்புகள் இலங்கை அரசு அல்லது அரசுக் கைக் கூலிகள் தரும் ஒரு தலைப்பட்சமான அறிக்கைகளை வைத்துக் கொண்டு, மக்கள் இயக்கமான விடுதலைப் புலிகளைக் குற்றம் சொல்லக் கூடாது. புலிகள் அமைப்பைக் குறை சொன்ன இரு அமைப்புகளும் உடனடியாக எமது பகுதிக்கு வந்து பார்வையிட்டு, மக்களிடம் பேசிய பின் உண்மையைச் சொல்லட்டும்.
சமீபத்தில் இலங்கை ராணுவ வீரர் ஒருவர், பெண் விடுதலைப் புலியைக் கொன்று அவரது உடலை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தி அதை தனது மொபைல் போனில் படமாக்கி பரவ விட்டுள்ளார். இதைக் கண்டு ஆசிய மனித உரிமை அமைப்பு மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. உலகமே இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. உங்கள் கருத்து…
30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழர்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் இலங்கை ராணுவம் இறங்கியிருப்பதை உலகம் அறியும். இவ்வளவு கொடுமையான போர்க் குற்றங்களைச் செய்துள்ள ஒரு அரசை சர்வதேச சமூகம் அமைதியாக வேடிக்கை பார்ப்பது ஆச்சரியமாக, அதிர்ச்சியாக உள்ளத
கிருஷாந்தி முதல் கோனீஸ்வரி வரை இலங்கை ராணுவம் நிகழ்த்திய எத்தனையோ கற்பழிப்பு, கொடூர கொலைகளை இந்த உலகம் ஆதாரங்களுடன் பார்த்துவிட்டது.
இலங்கை ராணுவமும், அரசும் செய்துள்ள போர்க் குற்றங்கள் கொஞ்சமல்ல… அது ஒரு நெடிய துன்ப வரலாறு…
பொதுவாக போர் சேதம் பற்றி மீடியாவுக்கு கூறும்போது, விடுதலைப்புலிகள் அமைப்பின் அதிகாரிகள் தங்கள் தரப்பு இழப்பை வெளியில் சொல்வதில்லை. போர் உயிரிழப்பு குறித்து மீடியாவுக்கு எந்த அடிப்படையில் தகவல் தருகிறீர்கள்…?
எமது அமைப்பின் வீர்ர் யார் மரணத்தைத் தழுவினாலும், உடனடியாக அவரது குடும்பத்துக்கு தகவல்களைத் தெரிவித்து விடுகிறோம். சண்டையின் இழப்புகள், சேதாரங்களை உடனுக்குடன் மீடியாவுக்கு மறைக்காமல் தந்து வருகிறோம்.
மக்களுக்கான உரிமை மீட்புப் போரில் உயிரிழந்த எமது மாவீரர்களின் விவரங்களை, தமிழீழ மாவீரர் செயலக அதிகாரிகள் உரிய கால இடைவெளியில், மீடியாவுக்கு தந்து வருகிறார்கள்.
போர்க்கள நிலவரம் குறித்து தகவல் தருகிற போது மட்டும் எமது கமாண்டர்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக சில விவரங்களைத் தெரிவிப்பதில்லை. எதிரிப் படைகள் எம்மைப் பற்றிய ரகசியங்களை, எமது போர் தந்திரோபாயங்களை அறிந்து கொள்ள அவை காரணமாகிவிடும் என்பதாலேயே இந்த எச்சரிக்கை நடவடிக்கை.
வன்னிப் போரில் ஈடுபட்டுள்ள இலங்கையின் ராணுவப் பிரிவில் மிக இளம் வயது சிறார்களை பெருமளவு படையில் சேர்த்து வருவதாகக் கூறப்படுகிறதே…
உண்மைதான். சின்னஞ் சிறுவர்களை பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து பெருமளவு படையில் சேர்த்து வருகிறது இலங்கை ராணுவம். இவர்களை உள்ளார்ந்த சிங்கள கிராமங்களிலிருந்து கட்டாயப்படுத்தி அழைத்து வந்து சேர்க்கின்றனர். தமிழ் சமுதாயத்துக்கு எதிரான இனப்படுகொலையில் தங்கள் குழந்தைகள் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்பதை இவர்களின் பெற்றோர் புரிந்து கொண்டு, இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.
இதிலும்கூட உயர்மட்ட சிங்களர்களின் பிள்ளைகளை ராணுவம் கட்டாயப்படுத்துவதில்லை. அடிமட்டத்தில் உள்ளவர்களின் பிள்ளைகளை கட்டாயப்படுத்தி படையில் சேர்த்து, உயர்மட்ட சிங்களர்களைத் திருப்திப்படுத்துகிரார்கள்.
இதை சிங்கள மக்கள் உணர வேண்டும். அவர்களின் அத்தகையதொரு உரிமைப் போருக்கு எமது இயக்கமும் துணை நிற்கும் என்பதை சிங்கள மக்களுக்கு இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.
-தமிழாக்கம்: எஸ் எஸ்
www.envazhi.com
தள மாற்றங்கள் @ giriblog | Announcement
4 years ago