திங்கள்கிழமை, ஏப். 7, 2008
பெங்களூர்: எனது படங்களைக் கர்நாடகத்தில் திரையிடாவிட்டால் எனக்கு எந்த நஷ்டமும் இல்லை. மன்னிப்பு கேட்கும் அளவுக்கு நான் எந்த தவறும் செய்யவில்லை. எனவே மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
சென்னை உண்ணாவிரதப் போராட்டத்தில் ரஜினி பேசுகையில், தமிழகத்திற்கும், கர்நாடகத்திற்கும் இடையே மோதலை உண்டாக்கும் வகையில் போராட்டம் நடத்தி வரும் கன்னட அமைப்பினரை உதைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
ரஜினியின் பேச்சுக்கு கன்னட அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ரஜினி இனிமேல் கர்நாடகத்திற்குள் நுழையக் கூடாது. அவரது படங்களைத் திரையிட அனுமதிக்க மாட்டோம். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வாட்டாள் நாகராஜ், ராஜ்குமார் ரசிகர் மன்றத் தலைவர் சா.ரா.கோவிந்து ஆகியோர் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் உதயா டிவிக்கு ரஜினிகாந்த் ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில், கடந்த 2 நாட்களாக என்னைப் பற்றி கர்நாடகத்தில் தவறான பிரசாரம் நடக்கிறது. கன்னட மக்களை உதைக்க வேண்டும் என்று நான் சொன்னதாக பிரசாரம் செய்கிறார்கள்.
உதைக்க வேண்டாமா என்று நான் பேசினேன். ஆனால் யாரைப் பேசினேன். சில விஷக் கிருமிகளை, தமிழ்நாடு, கர்நாடக அமைதியைக் கெடுக்கும் விஷ கிருமிகளை உதைக்க வேண்டும் என்றுதான் சொன்னேன்.
சிறு சிறு விஷயங்களுக்காக பஸ்களைக் கொளுத்துவது, தியேட்டர்களை உடைப்பது போன்ற வன்முறைச் செயல்களில் ஈடுபடுபவர்களைத்தான் அவ்வாறு சொன்னேன்.
மற்றபடி கர்நாடக மக்களை உதைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நான் சொல்லவே இல்லை. 5 கோடி மக்களை உதைக்க வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு நான் முட்டாள் அல்ல. விவேகம் இல்லாதவன் அல்ல.
எனது பேச்சு கர்நாடக மக்களின் மனதை பாதித்திருந்தால் நான் மன்னிப்பு கேட்கத் தயார். ஆனால் அந்தளவுக்கு நான் ஒரு தவறும் செய்யவில்லை. இதனால் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை.
பர்வதம்மா ராஜ்குமார் (ராஜ்குமாரின் மனைவி), விஷ்ணுவர்த்தன், அம்பரீஷ், கிரீஷ் கர்னாட், அஸ்வத் (இசையமைப்பாளர்) ஆகிய பெரிய மனிதர்கள் தங்களது மனசாட்சியைத் தொட்டுச் சொல்லட்டும், நான் தவறு செய்ததாக. அவர்கள் சொன்னால் மன்னிப்பு கேட்கிறேன்.
என்னை மன்னிப்பு கேட்கச் சொல்லும் கன்னட அமைப்புகளைச் சேர்ந்த நான்கைந்து பேர் ஒட்டுமொத்த கர்நாடகத்தின் 5 கோடி மக்களின் பிரதிநிதிகள் அல்ல.
எனது படத்தை கர்நாடகத்தில் திரையிட விட மாட்டோம் என்கிறார்கள். கர்நாடகத்தில் ரஜினிகாந்த் படத்தைத் திரையிடாவிட்டால் எனக்கு எந்த நஷ்டமும் இல்லை. கர்நாடகத்தில் உள்ள தமிழர்கள் மட்டும் எனது படத்தைப் பார்க்கவில்லை. அங்குள்ள கன்னடர்களும்தான் பார்க்கிறார்கள்.
எனவே இந்தப் பிரச்சினைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வையுங்கள் என்றார் ரஜினிகாந்த்.
-எஸ்.எஸ்