ஒவ்வொரு படத்தின் வெளியீட்டுக்கு முன் அல்லது வெளியான அடுத்த நாள் பத்திரிகையாளர்களைச் சந்திப்பது அஜீத்தின் பாணி.
முன்பெல்லாம் இந்தமாதிரி சந்திப்பின் போது நிறைய பேசுவார் அஜீத். ஆனால் அந்தப் பேச்சின் ‘பலன்’களை நிறைய அனுபவித்து விட்டதாலோ என்னமோ இப்போது முழுமையாக அடக்கி வாசிக்கிறார்.
ஆனால் ஒவ்வொரு பத்திரிகையாளரிடமும் நிறைய நேரம் தனிப்பட்ட முறையில் பேசுகிறார், குடும்பம், உடல்நிலை, பொருளாதார நிலை, அவரது எண்ணங்கள் இப்படி நிறைய... ஆனால் எதுவும் பத்திரிகையில் போடுவதற்கல்ல!
ஏகன் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாவதையொட்டி 300-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களுக்கு சென்னை அடையாறு பார்க் ஷெராட்டன் ஓட்டலில் விருந்து கொடுத்தார் அஜீத். மாலை 6 மணிக்கு ஆரம்பித்த இந்த சந்திப்பு இரவு 10 வரை நீண்டது.
பத்திரிகையாளர்கள் எவ்வளவோ வற்புறுத்தியும்கூட அஜீத் எதுவும் பேச மறுத்துவிட்டார்.
அது என்ன தனித் தனியாக பேசுகிறீர்கள்... அதையே மொத்தப் பேருக்கும் சேர்த்துப் பேசினால் என்ன? – அவரிடம் இந்தக் கேள்வியைக் கேட்டே விட்டேன்.
அது வந்து சார்... மைக் பிடிச்சி நான் பேச ஆரம்பிச்சாலே, நான் சொல்ல வந்த விஷயத்தை திசை திருப்பிடறாங்க. இதுகூட நான் ரஜினி சார்கிட்டருந்து கத்துக்கிட்டதுதான். நான் தெரிவிக்க நினைக்கிறது ஒரு விஷயமா இருக்கும். ஆனால் மக்களைச் சென்று சேரும்போது அதுவே வேறு செய்தியாக இருக்கும்.
இப்படித்தான் என் பெயர் தேவையில்லாத சிக்கலில் சிக்கிக் கொண்டது சில ஆண்டுகளுக்கு முன். இப்போதுதான் அந்த மாதிரி வீண் வம்புகளில் சிக்காமல் இருப்பது எப்படின்னு கத்துக்கிட்டேன்.
ரஜினி சார் ஒருமுறை என்கிட்ட இப்படிச் சொன்னார்: நிறைய செய்ங்க... குறைவா பேசுங்கன்னு. நம்ம தலைவர் வழிதான், என் வழியும். அவர் சொன்னதைத்தான் இப்போ கடைப்பிடிக்கிறேன். அவர் கொடுத்த இமாலயன் மாஸ்டர்ஸ்தான் இப்போ என்னோட குரு.
இப்போ உங்ககிட்ட நான் பேசின இதே விஷயங்களை பிரஸ் மீட்ல பேசியிருந்தா, இதை எப்படியெல்லாம் கொண்டு போயிருப்பாங்கன்னு நினைச்சுப் பாருங்க... அதான் இந்த மீட்டிங்கை ஜஸ்ட் ஒரு கெட் டு கெதரா மாத்திட்டேன்...
இப்ப என்ன தெரியணும் என்னைப் பத்தி... நான் சந்தோஷமா இருக்கேன். நல்ல மனிதர்கள் இப்போ என்னைப் பத்திப் புரிஞ்சிக்கிட்டாங்க. அதுவே போதும் எனக்கு..., என்றார். பேச்சில் இன்னும் அந்தப் பழைய அஜீத்.
ஆனால் ‘தலைவர்’ வழிக்கு வந்த பிறகு ஒரு புதிய, அமைதியான அஜீத்தைப் பார்க்க முடிந்தது!
http://www.envazhi.com
No comments:
Post a Comment