Monday, April 7, 2008

மன்னிப்புக் கேட்க வேண்டிய அவசியமில்லை - ரஜினி உறுதி




திங்கள்கிழமை, ஏப். 7, 2008

பெங்களூர்: எனது படங்களைக் கர்நாடகத்தில் திரையிடாவிட்டால் எனக்கு எந்த நஷ்டமும் இல்லை. மன்னிப்பு கேட்கும் அளவுக்கு நான் எந்த தவறும் செய்யவில்லை. எனவே மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

சென்னை உண்ணாவிரதப் போராட்டத்தில் ரஜினி பேசுகையில், தமிழகத்திற்கும், கர்நாடகத்திற்கும் இடையே மோதலை உண்டாக்கும் வகையில் போராட்டம் நடத்தி வரும் கன்னட அமைப்பினரை உதைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

ரஜினியின் பேச்சுக்கு கன்னட அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ரஜினி இனிமேல் கர்நாடகத்திற்குள் நுழையக் கூடாது. அவரது படங்களைத் திரையிட அனுமதிக்க மாட்டோம். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வாட்டாள் நாகராஜ், ராஜ்குமார் ரசிகர் மன்றத் தலைவர் சா.ரா.கோவிந்து ஆகியோர் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் உதயா டிவிக்கு ரஜினிகாந்த் ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில், கடந்த 2 நாட்களாக என்னைப் பற்றி கர்நாடகத்தில் தவறான பிரசாரம் நடக்கிறது. கன்னட மக்களை உதைக்க வேண்டும் என்று நான் சொன்னதாக பிரசாரம் செய்கிறார்கள்.

உதைக்க வேண்டாமா என்று நான் பேசினேன். ஆனால் யாரைப் பேசினேன். சில விஷக் கிருமிகளை, தமிழ்நாடு, கர்நாடக அமைதியைக் கெடுக்கும் விஷ கிருமிகளை உதைக்க வேண்டும் என்றுதான் சொன்னேன்.

சிறு சிறு விஷயங்களுக்காக பஸ்களைக் கொளுத்துவது, தியேட்டர்களை உடைப்பது போன்ற வன்முறைச் செயல்களில் ஈடுபடுபவர்களைத்தான் அவ்வாறு சொன்னேன்.

மற்றபடி கர்நாடக மக்களை உதைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நான் சொல்லவே இல்லை. 5 கோடி மக்களை உதைக்க வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு நான் முட்டாள் அல்ல. விவேகம் இல்லாதவன் அல்ல.

எனது பேச்சு கர்நாடக மக்களின் மனதை பாதித்திருந்தால் நான் மன்னிப்பு கேட்கத் தயார். ஆனால் அந்தளவுக்கு நான் ஒரு தவறும் செய்யவில்லை. இதனால் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை.

பர்வதம்மா ராஜ்குமார் (ராஜ்குமாரின் மனைவி), விஷ்ணுவர்த்தன், அம்பரீஷ், கிரீஷ் கர்னாட், அஸ்வத் (இசையமைப்பாளர்) ஆகிய பெரிய மனிதர்கள் தங்களது மனசாட்சியைத் தொட்டுச் சொல்லட்டும், நான் தவறு செய்ததாக. அவர்கள் சொன்னால் மன்னிப்பு கேட்கிறேன்.

என்னை மன்னிப்பு கேட்கச் சொல்லும் கன்னட அமைப்புகளைச் சேர்ந்த நான்கைந்து பேர் ஒட்டுமொத்த கர்நாடகத்தின் 5 கோடி மக்களின் பிரதிநிதிகள் அல்ல.

எனது படத்தை கர்நாடகத்தில் திரையிட விட மாட்டோம் என்கிறார்கள். கர்நாடகத்தில் ரஜினிகாந்த் படத்தைத் திரையிடாவிட்டால் எனக்கு எந்த நஷ்டமும் இல்லை. கர்நாடகத்தில் உள்ள தமிழர்கள் மட்டும் எனது படத்தைப் பார்க்கவில்லை. அங்குள்ள கன்னடர்களும்தான் பார்க்கிறார்கள்.

எனவே இந்தப் பிரச்சினைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வையுங்கள் என்றார் ரஜினிகாந்த்.

-எஸ்.எஸ்

Saturday, April 5, 2008

அரசியலுக்காக ஆட்டம் போடாதீர்கள் - ரஜினி ஆவேசம்





நான் பெரிதாக மதிக்கிற கர்நாடக அரசியல்வாதிள் அனைவருமே இன்று அரசியல் ஆதாயத்துக்காக ஆட்டம் போடுகிறார்கள். அவர்களை எச்சரிக்கிறேன்... அரசியலுக்காக ஆட்டம் போடாதீர்கள்; அழிந்துவிடுவீர்கள் என்று கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.
தமிழக அரசு சமீபத்தில் அடிக்கல் நாட்டிய ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகாவில் வசிக்கும் தமிழர்கள் மீது கடும் வன்முறையை சில தீவிர கன்னட அமைப்புகள் கட்டவிழ்த்து விட்டன.
பெங்களூரில் தமிழ்படங்கள் திரையிடப்பட்ட தியேட்டர்கள் மற்றும் தமிழ் நாளிதழ் அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதனைக் கண்டித்தும் குடிநீர் திட்டத்தை உடனே நிறைவேற்றக் கோரியும் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் இன்று ஒரு நாள் பட்டினிப் போராட்டம் நடத்தியது.
இப்போராட்டத்தில் நிறைவுரையாற்றிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மிகவும் உணர்ச்சிவசப்பட்டவராகக் கானப்பட்டார். அவரது ஆவேசப் பேச்சிலிருந்து....
இது ஒரு வித்தியாசமான சந்திப்பு என்றுதான் சொல்ல வேண்டும். மிகவும் அதிகமாகப் பேசி புகழ்பெறுவதும் கஷ்டம், குறைவாகப் பேசி புகழ்பெறுவதும் கஷ்டம். இங்கே பேசியவர்கள் மிகவும் உணர்ச்சி வசப்பட்டார்கள். நியாயம்தான். நடந்துள்ள விஷயங்கள் அனைத்தும் மனதுக்கு மிகவும் வேதனையைத் தருவதாக உள்ளன.
குறிப்பாக கர்நாடகாவில் தமிழ் மக்கள் தாக்கப்பட்டதற்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் மக்கள் மீதான வன்முறைக்குக் காரணமானவர்களைக் கண்டிக்கிறேன். இதற்காக வேதனைப்படுகிறேன்.
நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது. கவர்ன்மென்ட் இருக்கா, சுப்ரீம் கோர்ட் எல்லாம் இருக்கிறதா... மக்கள் யார் பேச்சைக் கேட்கிறார்கள்... யார் சொன்னால் கேட்பார்கள்... புரியவில்லை.
இப்ப நம்மளோட நிலம் இருக்கு... அதை வேறொருத்தர் சொந்தம்னு சொன்னா, பட்டா இருக்கா எடுய்யான்னு கோட்டு, அது இருந்தா ரிஜிஸ்திட்ராரே ஒதைச்சு அனுப்பிச்சுடுவார்...

பல ஆண்டுகளுக்கு முன்பே ஒகேனக்கல்லின் ஒரு பகுதி கர்நாடகாவுக்கும், மறுபகுதி தமிழகத்துக்கும் என ஒதுக்கப்பட்டுவிட்டது. தனக்காக ஒதுக்கப்பட்ட பகுதியிலிருந்து நாம தண்ணி எடுத்துக்க திட்டம் போட்டா அதை எடுக்கக் கூடாதுன்னு தடுத்தா ஒதைக்க வேண்டாமா...
இதை எப்பவுமே அவங்க பண்ணிக்கிட்டிருக்காங்க... விடுங்க. சரி, எனக்கு இதுல என்ன வருத்தம்னு சொன்னா... ஒரு தேசியக் கட்சி... மிகப்பெரிய தேசியக் கட்சி, அந்த மாநிலத்தின் அந்த கட்சியோட மிகப்பெரிய தலைவராக இருந்தவர், இருப்பவர் இப்ப வந்து இந்த விஷயத்தைத் தூண்டிவிடறார். என்ன கேவலம் பாருங்க.

என்ன நடந்தாலும் கைகட்டி வேடிக்கைப் பார்க்க எதற்கு அரசாங்கம்? இந்த வட்டாள்... நாராயணகவுடா அவுங்க இவுங்க எல்லாத்தையும் விட்டுடுங்க...
பெரிய தலைவர்கள் ரேஞ்சுக்குப் பேசுவோம். அப்படிப்பட்ட ஒரு பெரிய தலைவர் வந்து இதைத் தூண்டிவிடுறார். எதுக்கு எலக்ஷன்... தேர்தல் வருது. அந்த தேசியக் கட்சியைச் சேர்ந்தவங்க, இங்க நம்ம மாநிலத்தில் இருக்கறவங்க எல்லாம் வேடிக்கைப் பார்த்துக்கிட்டு சும்மா இருக்காங்க.
கர்நாடகத்தைச் சேர்ந்த நான் மிகவும் மதிக்கிற ஒரு தலைவர் அவர். மும்பையிலிருந்து இப்ப வந்துட்டு, இந்தப் பிரச்சினைக்கெல்லாம் அதாவது இந்த வைரஸ் உருவாகக் காரணமே, கலைஞர்தான்னு சொல்றார். என்ன கேவலங்க இது.
மக்கள் என்ன முட்டாள்களா... அவர்களுக்கு ஒன்றுமே தெரியாதா.... மக்கள் எங்கிருந்தாலும் அது கர்நாடகமோ தமிழகமோ... அவங்க முட்டாள்கள் அல்ல...
அரசியல்வாதிகளே உண்மையைப் பேசுங்க. சத்தியம் பேசுங்க. சுயநினைவோட பேசுங்க. (நெஞ்சில் கை வைத்து) இங்க இருந்து பேசணும்... அவன் பாத்துக்கிட்டே இருக்கான். தெய்வம் அவன். இங்க இருக்கிற நீங்கள்ளாம் தெய்வத்துக்குச் சமம்... எனக்குத் தெரியாதா...
உண்மை, சத்தியம், நியாயம் அதுதான் என்னிக்குமே சோறுபோடும். என்னிக்குமே காப்பாத்தும். சும்மா எல்லாரும் எலெக்ஷனுக்காக ஆட்டம் போட்டுக்கிட்டிருக்காங்க... எனக்குத் தெரியும்.
இதை அக்கட்சி சும்மா வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. காரணம் அங்கே விரைவில் வரப்போகிற தேர்தல். அரசியல் ஆதாயத்துக்காக அப்படிச் செய்கிறார்கள்.
நான் கர்நாடகத்திலிருக்கும் மதிப்புக்குரிய தேவகவுடா, குமாரசாமி, எடியூரப்பா சித்தராமையா, தரம்சிங், கார்கே. அனந்தமூர்த்தி போன்றவர்களுக்கும் ஒன்று சொல்லிக் கொள்கிறேன். அரசியலுக்காக ஆட்டம் போடாதீர்கள்... அதன் விளைவு மோசமாக இருக்கும். உங்களையே அழிச்சிடும்.
இதை மீண்டும் மீண்டும் வளர விடாதீர்கள், காவிரி பிரச்சினை மாதிரி. பத்து வருஷம் ஆச்சி, இந்த அரசு இந்த விஷயத்தில் என்ஓசி போட்டு. அறிவோட செயல்படுங்க தயவு செஞ்சு. இங்கே, கலைஞர் மற்றும் எல்லாருக்கும் எனது வேண்டுகோள்... இது நகத்தால் கிள்ளி எறியப்பட வேண்டிய விஷயம். அதற்கு இதைவிட்டால் சரியான நேரம் கிடைக்காது. இப்போது அதைச் செய்யத்தவறிவிட்டால் பின்னர் கோடாலி கொண்டு வெட்டினாலும் பிரச்சினை தீராது. இப்பவே, இந்த நிமிஷமே ஏந்த வேலையைச் செய்யணும். இதைவிட வேறு பெரிய பிரச்சினை இப்போது கிடையாது.
உங்களது இந்த அரசியல் விளையாட்டில் பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள்தான். எனவே இம்மாதிரி உணர்வுப்பூர்வமான விஷயங்களை அரசியலாக்காதீர்கள், தயவுசெய்து இந்த விஷயத்துக்கு இப்பவே முடிவு கட்டுங்க... என்றார் ஆவேசமாக.